சத்குருவின் விருப்பப் பாடலை பாடிய ஜெர்மன் பாடகி! - சத்குரு பாராட்டு!
ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிரபல பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மன் கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு அவர்களை சந்தித்தார். அப்போது அவரது விருப்ப பாடலான ஆதிசங்கரர் எழுதிய “நிர்வாண ஷடக”த்தை பாடிக்காட்டினார். இந்த காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த சத்குரு கசாண்ட்ராவிற்கு பாராட்டு தெரிவித்தார்.
சமூக வலைதளத்தில் மிகவும் புகழ் பெற்றிருப்பவர் ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மன். பார்வையற்ற மாற்றுத் திறனாளியான இவர் இந்திய கர்நாடக பாடல்களை பாடி காணொளி வெளியிடுவதில் மிகவும் பிரபலமானவர். நம் பாரத நாட்டிற்கு முதன் முறையாக வருகை தந்திருக்கும் இவர் கோவை ஈஷா யோக மையத்திற்கு வந்திருந்து சத்குரு அவர்களை நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது, ஆன்மீகத்தில் ஆழங்கால் பட்ட ஆதி சங்கராச்சாரியார் இயற்றிய சமஸ்கிருத பாடல் “நிர்வாண ஷடகத்தை” சத்குருவிற்கு பாடி அர்ப்பணித்தார். அவருடைய பக்திக்கு பெருமை சேர்க்கும் விதமாக சத்குரு அவர்கள் தனது மலர் மாலையை அணிவித்து ஆசி வழங்கினார்.
இந்த காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த சத்குரு “நமஸ்காரம் கசாண்ட்ரா! ஈஷா யோக மையத்தில் நீங்கள் எங்களுடன் இருந்தது அற்புதமானது மற்றும் பக்தி என்ற தடைகள் ஏதும் அறியாத மொழியில் நீங்கள் பாடுவதை கேட்பது சிறந்த விருந்தாக இருந்தது. குறையைக் கூட நிறைவானதாக மாற்ற முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. உங்களுக்கு என் வாழ்த்துகளும் & ஆசியும்”என பாராட்டு தெரிவித்துள்ளார்.
Wow, these are the most inspiring words I have ever heard. I really enjoyed being with you, lots of love CassMae https://t.co/2tgjwDcqBT
— CassMae (@CassMaeSpittman) March 1, 2024
இதற்கு, “வாவ்! நான் கேட்டதிலேயே மிகவும் ஊக்கமளிக்கும் வார்த்தைகள் இவை. உங்களோடு இருந்த தருணங்களை எண்ணி மகிழ்கிறேன்” என பதில் பதிவு இட்டுள்ளார் காசண்ட்ரா.
அதுமட்டுமின்றி, ஈஷா யோக மையத்தில் அவர் தங்கியிருந்தபோது, சில யோகப் பயிற்சிகளை கற்றுக்கொண்டார். மேலும், இந்திய கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கோவில்கள் குறித்தும் அறிந்து கொண்டார். அதோடு, சுற்றுச்சுழல் சார்ந்தும்,சமூக செயல்பாடுகள் சார்ந்தும் ஈஷா அறக்கட்டளை செய்து வரும் பங்களிப்புகளை பற்றியும் தெரிந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து, “நான் ஜெர்மனி திரும்பி செல்கையில்,இந்தியாவின் அனைத்து நினைவு தடங்களையும் என்னுள் வைத்துக் கொள்வேன். அதை கொண்டு நிறைய பாடல்களை உருவாக்குவேன்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.