கோவை தடாகம் பகுதியின் விளை நிலங்களில் அட்டகாசம் செய்யும் காட்டு விலங்குகள் - விவசாயிகள் வேதனை
கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் விளை நிலங்களில் காட்டு பன்றிகள் உட்பட காட்டு விலங்குகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு விவசாயப் பணிகள் மும்முறமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே தடாகம் காவல் நிலையம் மற்றும் வனப் பணியாளர் குடியிருப்புக்கு மேற்கே உள்ள தோட்டப்பகுதியில் நேற்று மாலை நுழைந்த காட்டுப்பன்றிகள் மரம் வளர்க்க பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த செடிகளை தோண்டி சேதப்படுத்தி உள்ளன.
இந்நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்ட அரசு விதிகளின்படி காப்புக் காடுகளுக்கு 3 கி.மீ. தொலைவுக்கு மேலே இருக்கும் தோட்டங்களில் பன்றிகள் வந்தால் வனத்துறையினர் சுட்டுப் பிடிக்கலாம். ஆனால் தடாகம், ஆனைக்கட்டி, வீரபாண்டி புதூர், காளையனூர், சோமையனூர், மடத்தூர் நஞ்சுண்டாபுரம், வரப்பாளையம் தாளியூர், பாப்பநாயக்கன்பாளையம் என பெரும்பாலான ஊர்களின் விவசாய நிலங்கள் காப்புக் காடுகளுக்கு 3 கி.மீ., தூரத்துக்குள்ளாகவே உள்ளன.
இப்பகுதிகளில் நுழையும் பன்றிகளை சுடக் கூடாது. இவற்றை பிடித்து, மீண்டும் வனத்துக்குள் விட வேண்டும். வாழை, கரும்பு, சோளம், பூசணி, அவரை உள்ளிட்ட கொடிப் பயிர்கள், கடலை, தக்காளி, காலிபிளவர், முட்டைகோஸ், முள்ளங்கி உள்ளிட்ட பல காய்கறிகள், பழங்கள், கிழங்கு வகைகள் வளர்ப்பதைத் தவிர்க்கும் விவசாயிகள் இனி மரப் பயிர்களை யாவது வளர்க்க முடியுமா என்னும் அச்சம் மேலோங்கி வருகிறது.
இதனிடையே காட்டு பன்றிகள் தாக்குதலில் இருந்து உடனடியாக மரக் கன்றுகளைக் காப்பாற்ற எஃகு மூலம் செய்யப்பட்ட கூண்டுகள் (Tree Guard) வைக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் அமைச்சகம், US AID, Trees Outside Forests of India (TOFI) திட்டம் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலை.(TNAU) உதவியால் கிடைத்த நிதியில் சில கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி காட்டு பன்றிகளிடம் இருந்து செடிகளை காப்பாற்றலாம் ஆனால், யானை வந்தால் என்ன செய்வது என அப்பகுதி விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.