கோவையில் தொழில் பேட்டை ஆமைக்க எதிர்ப்பு - விவசாயிகள் நடைபயணம்
கோவை மாவட்டம் அன்னூரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழில்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பிரசார நடை பயணம் மேற்கொண்டனர்.
கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 6 ஊராட்சிகளில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழில்பேட்டை அமைக்க அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் விவசாயிகளின் நிலம் அவர்களது விருப்பமின்றி கையகப்படுத்தப்படாது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தனியார் வசம் உள்ள தரிசு நிலங்களில் மட்டுமே தொழில் பேட்டை அமைக்கப்படும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் அன்னூர் பகுதியில் தொழில்பேட்டை அமைவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அன்னூரில் தொழில்பேட்டை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி பிரசார நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. அக்கரை செங்கப்பள்ளி கிராமத்தில் துவங்கிய பிரசார நடை பயணம், சொலவம்பாளையம், ஆலங்குட்டை உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியே சுமார் 10 கிலோ மீட்டர் சென்று வடக்கல்லூரில் நிறைவுற்றது.
நடைப்பயணத்தின் போது கிராம மக்களிடையே விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. சுமார் 300-க்கும் மேற்பட்டோர் நடை பயணத்தில் பங்கேற்று தொழிற்பேட்டைக்கு எதிராக பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.