கோவையில் பூங்காவில் மின்சாரம் தாக்கி சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம்; மின்வாரியம் பரபரப்பு குற்றச்சாட்டு
கோவை சரவணம்பட்டி ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில், பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே மின் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் சரவணம்பட்டி - துடியலூர் சாலையில் ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் அவர்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த குடியிருப்பில் வசித்து வரும் பிரசாந்த் என்பவரின் மூத்த மகன் ஜியான்ஸ் ரெட்டி (6), பாலச்சந்தர் என்பவரின் மகள் பிரியா (8) ஆகிய இரு குழந்தைகளும் நேற்று மாலை அங்குள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தனர். மாலை 6.50 மணி அளவில் சறுக்கு விளையாட்டு விளையாடிக்கொண்டு இருத்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். குழந்தைகள் ஜியான்ஸ் ரெட்டி, பிரியா ஆகிய இருவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே விபத்து ஏற்பட்ட சரவணம்பட்டி ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாக பூங்காவை மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வு முடித்து வெளியில் வந்த அதிகாரிகளிடம் விபத்துக்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது பேட்டி அளித்த அதிகாரிகள் குடியிருப்போர் நல சங்கத்தினரின் அஜாக்கிரதை காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
குடியிருப்பு வளாகத்தில் குழந்தைகள் பூங்காவை மேம்படுத்தி இருக்கின்றனர். பூங்காவை மேம்படுத்தும் போது பூங்காவின் கீழே மின் கேபிள் போட்டு இருக்கின்றனர். தெருவிளக்கு ஆன் செய்யும் பொழுது மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் இறந்திருக்கின்றனர். இந்த இடம் மின்வாரிய பொறுப்பு கிடையாது எனவும், அவர்களின் பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது. தெருவிளக்கை அவர்கள் தான் பராமரித்து வருகின்றனர் மொத்தமாக கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.