கோவையில் ஆபத்தை உணராமல் படிகளில் தொங்கியவாறு பயணம் செய்யும் மாணவர்கள்
கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் தனியார் பேருந்தின் படிக்கட்டில் ஆபத்தை உணராமல் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
கோவையின் அண்டை மாவட்டமான திருப்பூரில் இருந்து ஏராளமான மாணவர்கள் கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனர். பெரும்பாலான மாணவர்கள் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தை நம்பியே உள்ளனர். கோவை மற்றும் திருப்பூரில் அரசுப் பேருந்துகளுக்கு நிகராக தனியார் பேருந்துகளும் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.
கல்லூரிக்கு விரைவில் வந்து சேர பெரும்பாலான மாணவர்களின் விருப்பத் தேர்வாக அதிக இடங்களில் நிற்காத தனியார் பேருந்துகளாகவே உள்ளது. அதுமட்டுமின்றி அவிநாசி சாலையில் ஏராளமான தொழிற்சாலைகளும், கல்லூரிகளும் உள்ள நிலையில் காலை நேரங்களில் தனியார் பேருந்துகள் மட்டும் இன்றி மாநகர பேருந்துகளிலும் கூட்ட நெரிசல் சற்று அதிகமாகவே காணப்படும்.
இந்த நிலையில் தனியார் பேருந்து ஒன்றில் மாணவர்கள் ஆபத்தை உணராமல் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வகையில் படியில் பயணம் மேற்கொண்ட பதைபதைக்க வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அவிநாசி- நீலாம்பூர் சாலையில் இந்த வீடியோ இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. காலை நேரங்களில் மாணவர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கூடுதலாக பேருந்தை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. அதே வேளையில் மாணவர்கள் பொறுப்புடன் பயணிக்கும் வகையில் அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.