தூய்மைப் பணியாளர் வேலை நேரத்தை மாற்றக்கோரி கோவையில் போராட்டம்
தூய்மைப் பணியாளர்களின் வேலை நேரத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தியும் சாலை விபத்தில் இறந்த தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு கோரியும் வியாழக்கிழமை காலை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
கோவை புறநகர் பகுதிகளில் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களை அதிகாலை 5:45 மணிக்குகே பணிக்கு வருமாறு நிர்வாகம் வலியுறுத்துகிறது. இதற்கு தூய்மைப் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை கோவை பூலுவப்பட்டி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் இருவர் அதிகாலையில் பணிக்கு வரும்போது அரசு பேருந்து மோதி உயிரிழந்தனர்.
உயிரிழந்த ராஜேந்திரன், தேவி தம்பதியின் மகன் தரனேஸ் மற்றும் மகள் வாசலேகா இருவரும் தங்கள் பெற்றோரின் மரணத்துக்கு நீதி கேட்டு கோவை மாவட்டக் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தக்க இழப்பீடு வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்கள் வேலைக்கு வரும் நேரத்தை காலை 7 மணியாக மாற்றவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுலவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தாய் தந்தை இருவரையும் இழந்து தரனேஸ், வாசலேகா இருவரும் கண்ணீர் விட்டு அழுத காட்சி காண்போர் மனதை கலங்க வைத்தது.