கோவை காவல் துறையின் ட்விட்டர் கணக்கு "ஹேக்"! - கிரிப்டோ கரன்சி கும்பல் கைவரிசையா?
கோவை மாநகர காவல் துறையின் ட்விட்டர் கணக்கு "ஹேக்" செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 5 மணி நேரத்திற்கு பிறகு காவல்துறையின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டு ஹேக்கிங் க்ரிப்டோ கரன்சி கும்பல் பதிவுகள் நீக்கம் செய்யப்பட்டன.
கோவை மாநகர காவல் துறை சார்பில் சமூகவலை தளப் பக்கங்கள் தனியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்து பதிவிடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று இரவு கோவை மாநகர காவல் துறையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தை ஹேக்கர்கள் ஹேக் செய்தனர். அந்தப் பக்கத்தில் கிரிப்டோ கரன்சி குறித்த தகவல்களும், சம்பந்தம் இல்லாத உரையாடல்களும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று காலை ட்விட்டர் கணக்கு "ஹேக்" செய்யப்பட்டதை அறிந்த கோவை மாநகர காவல்துறையினர் உடனடியாக அதை மீட்க முயற்சிகளை மேற்கொண்டனர்.
முடக்கப்பட்ட ட்விட்டர் பக்கத்தை 5 மணி நேரத்திற்கு பிறகு சைபர் கிரைம் பிரிவு போலீசார் மீட்டுள்ளனர் மீட்கப்பட்ட ட்விட்டர் கணக்கில் க்ரிப்டோ கரன்சி கும்பல் பதிவுகள் நீக்கம் செய்யப்பட்டது. கோவை மாநகர காவல் துறையின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்ப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது