ஒன்றரை கோடியை திருடிவிட்டார்கள்; போலீசில் பொய் புகார் அளித்த பாஜக பிரமுகர் மீது வழக்கு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே 18.5 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், எனது வீட்டில் இருந்த 1.5 கோடியை காணவில்லை என பொய் புகார் அளித்த பாஜக பிரமுகர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

case filed against bjp person who complaint fake allegation in coimbatore vel

கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த சொக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். பாஜக பிரமுகரான இவர் அதே பகுதியில் வாகனங்களை சுத்தம் செய்யும் ஒர்க் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் விஜயகுமார் சம்பவத்தன்று காலை  தனது தோட்டத்துக்கு சென்று விட்டு பிற்பகலில் மீண்டும் வீட்டுக்கு திரும்பியதாக சொல்லப்படுகிறது. அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. 

இதையடுத்து விஜயகுமார் தன் வீட்டில் வைத்திருந்த ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 9 சவரன் நகைகள் காணாமல் போனதாக அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி பாலாஜி தலைமையில் 10 தனிப் படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி போலீசார் சோதித்த போது, சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவர் விஜயகுமாரின் வீட்டுக்கு அருகே இருசக்கர வாகனத்தில் வந்து சென்றது தெரிய வந்தது. 

கோவையில் வெளுத்து வாங்கிய கனமழை; சாலையில் பெருக்கெடுத்த மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி

அதனை அடிப்படையாகக் கொண்டு கருமத்தம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்த அன்னூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பரசன் என்பதும், கருமத்தம்பட்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. பாஜக பிரமுகர் விஜயகுமாரின் வீட்டில் பூட்டை உடைத்து 18.5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 9 சவரன் நகைகளை அன்பரசன் கொள்ளையடித்துச் சென்றதாகக் ஒப்புக் கொண்டார். 

மேலும் பல்வேறு மாவட்டங்களில் அன்பரசன் மீது ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இதனை அடுத்து அவரிடம் இருந்த 18.5 லட்சம் ரொக்கம் மற்றும் 9 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக பாஜக பிரமுகர் விஜயகுமாரை  அழைத்து போலீசார் மீண்டும் விசாரணை நடத்தியதில், கொள்ளையர்களை விரைவாக பிடிப்பதற்காக போலீசுக்கு அழுத்தம் தரவே ஒன்றரை கோடி ரூபாய் காணாமல் போனதாக பொய்யான தகவலை தெரிவித்ததாக கூறி சமாளித்துள்ளார். 

நெல்லையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் வெட்டி படுகொலை; காதலி கண்முன்னே வெட்டி சாய்த்த கொடூரம்

இந்த வழக்கில் கொள்ளையன் 24 மணி நேரத்துக்குள்ளாக பிடிபட்ட நிலையில், அன்னூர் காவல் நிலையத்துக்கு நேரில் வந்த கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இது போன்ற கொள்ளை சம்பவங்களில் உண்மையான தகவலை கூறினால் மட்டுமே போலீசார் விசாரணையை துரிதப்படுத்த முடியும். தவறான தகவல்களை கூறினால் அது விசாரணையை பாதிக்கும். பொதுமக்கள் இது போன்ற குற்ற வழக்குகளில் பொய்யான தகவல்களை கொடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் பொய்யான தகவல்களை கூறி போலீசாரை அலைக்கழித்த பாஜக பிரமுகர் விஜயகுமார் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும் எஸ்.பி பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios