காரமடையில் ஓசி சிகரெட்டுக்காக கடையை சூறையாடிய அதிமுக பிரமுகர் கைது
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சிகரெட் கேட்டு மளிகை கடையை சூறையாடிய அதிமுக ஊராட்சிமன்ற துணைத்தலைவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த குணசீலன் கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரியபுத்தூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அன்னூர் ஒன்றியம் வடவள்ளி ஊராட்சியில் துணைத் தலைவராக இருந்து வரும் பாலு (42) நேற்று முன்தினம் மது போதையில் மளிகை கடைக்கு சென்று சிகரெட் கேட்டுள்ளார்.
அதற்கு குணசீலின் மனைவி பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளுமாறு கூறியுள்ளார். ஊராட்சி மன்ற துணைத்தலைவரான தன்னிடமே பணம் கேட்கிறாயா என்று தகாத வார்த்தைகளால் பேசியதோடு தாக்கியும் உள்ளார். மேலும், கடையில் உள்ள பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தை அறிந்த அருகில் இருந்த பேக்கரியின் உரிமையாளர் அவரை தட்டி கேட்டு உள்ளார். அவரையும் தகாத வார்த்தைகளால் பேசியதோடு, பேக்கரியில் இருந்த சேர் மற்றும் கண்ணாடிகளை உடைத்து சூறையாடி உள்ளார். மேலும், பாலு மளிகை கடை உரிமையாளரான குணசீலன், அவரது மனைவி மற்றும் பேக்கரியின் உரிமையாளர் உள்ளிட்ட மூவரையும் தனது காரால் ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டியும் உள்ளார். இச்சம்பவம் குறித்து குணசீலன் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பொள்ளாச்சியில் பயங்கரம்: பிரிட்ஜ் வெடித்து காவல் ஆய்வாளர் உள்பட 2 பேர் உடல் கருகி பலி
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரமடை காவல் ஆய்வாளர் குமார் தலைமையிலான காவல் துறையினர் மதுபோதையில் இருந்த பாலசுப்பிரமணியத்தை காரமடை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கோவையில் நடு ரோட்டில் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த கால் டாக்சி ஓட்டுநரால் பரபரப்பு
காவல் துறையினரின் தீவிர விசாரணையில் மது போதையில் தகாத வார்த்தைகளால் பேசி பெண்ணை தாக்கியதோடு மளிகை கடையை சூறையாடியது மற்றும் பேக்கரியை சூறையாடியதும், கொலை மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து பாலசுப்ரமணியம் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காரமடை காவல் துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் நடைபெற்ற போது பொதுமக்கள் ஒருவர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.