Watch : நடுரோட்டில் பிணத்தின் மீது உட்கார்ந்து பூஜை செய்த அகோரி; மக்கள் அதிர்ச்சி!!
நான் கடவுள் படத்தில் நடிகர் ஆர்யா பிணத்தின் மீது அமர்ந்து பூஜை செய்ததைப் போல சூலூரில் தற்கொலை செய்து கொண்ட நண்பரின் உடல் மீது அமர்ந்து சிவபூஜை நடத்தி இறுதிச்சடங்கு செய்ததை பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள குரும்ப பாளைத்தை சேர்ந்தவர் மணிகண்டன். ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக திருமணமான நிலையில், மனைவியுடன் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. குடும்ப பிரச்சனையால் மனவேதனையில் இருந்த மணிகண்டன் நேற்றைய தினம், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் மணிகண்டனுடன் சிறுவயது முதலே நண்பராக பழகி வந்த திருச்சியை சேர்ந்த அகோரி சாமியார், அவரது மரண செய்தி கேட்டு சூலூர் வந்து இறுதிச் சடங்கில் பங்கேற்றார். அப்போது காசியில் அகோரிகள் பிணத்தின் மீது அமர்ந்து இறுதி சடங்குகள் மேற்கொள்வதைப் போல, மணிகண்டனின் உடல் மீது அமர்ந்த சாமியார், அகோரிகள் புடை சூழ சிவ வாத்தியங்களுடன் காலபைரவர் பூஜை நடத்தி இறுதி சடங்கு செய்தார். இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மயானத்துக்கு வந்து அகோரி சாமியாரின் சிவ பூஜையை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது