ஊழல் குறித்து பேச உதயநிதிக்கு தகுதி இருக்கா..? எஸ்.பி வேலுமணி ஆவேசம் !!
கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடைபெறும் விதிமீறல்கள் குறித்து, மத்திய உள்துறை செயலாளருக்கும், உள்துறை அமைச்சருக்கும் புகாராக தெரிவிக்கப்பட்டு உள்ளதாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்து இருக்கிறார்.
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் அதிமுகவை சேர்ந்த 8 எம்எல்ஏ-க்கள் மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாவட்ட சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர் நாகராஜன் ஐஏஎஸ் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில், கோவையில் வாக்கு எண்ணிக்கையின்போது உரிய பாதகாப்பு வழங்கவும், வாக்குப்பதிவின்போது வெளியூர் நபர்களால் ஏற்பட்டதை போன்ற கலவரங்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் உரிய பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடத்தவும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய எஸ்.பி. வேலுமணி, ‘கோவை மாவட்டத்தில் இதுவரை நடக்காத பிரச்சினைகள், கலவரத்தை, கரூர், சென்னையில் இருந்து வந்தவர்களை கொண்டு நிகழ்த்தப்பட்டு உள்ளது. தேர்தலில் கலவரத்தை உண்டாக்கும் திமுக குறித்தும், அவர்கள் பட்டுவாடா செய்த பணம், பொருட்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
ஆட்சியர் அலுவலகத்தில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதுதொடர்பாக 9 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்கு போடப்பட்டது. கோவையில் ஒவ்வொரு வார்டிலும், கரூர், சென்னை ஆகிய இடங்களில் இருந்து வந்த நபர்கள் இருந்தனர். அவர்கள் மூலம், திமுகவினர் பணி விநியோகம் செய்தனர். இதுபோன்று, மோசமான சூழ்நிலையை உருவாக்கிய திமுகவை கண்டித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சிறப்பு தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் மனு அளித்துள்ளோம்.
தோற்றாலும், வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று திமுக, அரசு அதிகாரிகளை மிரட்டுகின்றனர். நிர்பந்தம் செய்கின்றனர். இப்படி மோசமான ஜனநாயக படுகொலை செய்ய ஆயத்தமாகி வருகின்றது, திமுக. இந்த தேர்தலில் நீதிமன்ற அறிவுறுத்தல்களை அதிகாரிகள் கடைபிடிக்க வில்லை. இதை தட்டிக்கேட்கவும், தடுக்கவும் வேண்டும் என்பதற்காக மனு அளிக்கப்பட்டு உள்ளது. உதயநிதி ஸ்டாலின், கோவையில் நடந்த கடைசி நாள் பிரச்சாரத்தில் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்தார்.
ஊழலை பற்றி பேசும் தகுதி உதயநிதிக்கு கிடையாது. உதயநிதி குடும்பமே ஊழலில் இருந்து வந்தது தான். தாத்தாவில் இருந்து இப்போது உதயநிதி வரை அனைவரும் ஊழலில் தளைத்தவர்கள் தான். பிரச்சாரத்தின்போது, சாவுமணி அடிப்பேன் என்ற வார்த்தையை உதயநிதி சொல்லி இருக்கிறார். ஆனால், முதல்வர் இந்த விவகாரத்தில் மகனை கண்டிக்கவில்லை. முதல்வருக்கும், உதயநிதிக்கும், இங்கு இருக்கும் அமைச்சரும், கலவரம் செய்தாவது கோவையில் திமுகவை ஜெயிக்க வைக்க பார்க்கின்றனர். நீதிமன்றம் இதை பார்த்துக்கொண்டு இருக்கின்றது’ என்று கூறினார்.