கோவையில் மழை வேண்டி கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம்; விருந்தினர்களுக்கு கம்பு கூழ் விருந்து

கோவை மாவட்டம் அன்னூர் அருகே மேள தாளம் முழங்க மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

A donkey and a donkey were married to pray for rain in Coimbatore vel

கோவை மாவட்டம் அன்னூர் அருகே லக்கேபாளையம் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பஞ்ச கல்யாணி திருமணம் செய்வது என கிராம மக்கள் முடிவு எடுத்தனர். அதன்படி இன்று சுப்பிரமணியர் கோவிலில் கழுதைகளுக்கு திருமணம் நடைபெற்றது. 

திருமணத்தை ஒட்டி லக்கேபாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் கழுதை மணமகளாகவும், பக்கத்து கிராமமான கோவில்பாளையம் ஆண் கழுதை மணமகனாகவும் அலங்காரம் செய்யப்பட்டது. பெண் கழுதைக்கு புடவை கட்டி, வளையல், பாசி, அணிவித்து, உதட்டுச்சாயம் மற்றும் நெகச்சாயம் பூசி மணமகள் அலங்காரம் செய்யப்பட்டது.

இதேபோல ஆண் கழுதைக்கு வேஷ்டி மற்றும் துண்டு அணிவிக்கப்பட்டு மணமகன் அலங்காரம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து மணமகன் மற்றும் மணமகள் அழைப்பு நடைபெற்றது.  கோவிலில் பூஜை செய்யப்பட்ட பின்னர், மேளதாளம் முழங்க பெண் கழுதைக்கு தாலி அணிவிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.

கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம் எனவும், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் கடுமையான வறட்சி நிலவிய போது, கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்ததை தொடர்ந்து மழை பெய்தாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். எளிமையான முறையில் திருமணத்தை நடத்தி இருப்பதாகவும், மனிதர்களுக்கு திருமணம் செய்யும் முறைப்படி திருமணம் நடத்தி இருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.இதை தொடர்ந்து மறுவீடு அழைப்பும் நடைபெற்றது.  திருமணத்திற்கு வந்தவர்கள் மொய்ப்பணம் கொடுத்து சென்றனர். 

திருமணம் வந்தவர்களுக்கு கம்பங்கூழ் வழங்கப்பட்டது. மனிதர்களுக்கு திருமணம் நடைபெறுவது போலவே கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இத்திருமணத்தை தொடர்ந்து கட்டாயம் மழை வருமென்ற நம்பிக்கையில் கிராம மக்கள் மழையை எதிர்பார்த்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios