Asianet News TamilAsianet News Tamil

கவனக்குறைவாக குழந்தையுடன் சாலையை கடந்த பெண் விபத்தில் தூக்கி வீசப்பட்ட காட்சி

கோவை மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் சாலையை கடக்க முயன்ற பெண் மற்றொரு இரு சக்கர வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

5 persons injured road accident in coimbatore
Author
First Published Feb 2, 2023, 10:29 PM IST

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி மல்லிகா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை மல்லிகா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளார். அப்பொழுது சோமனூர் சாலையை சரியாக கவனிக்காமல் இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கல்லூரி மாணவர்கள் வந்த இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியது. 

இந்த விபத்தில் மல்லிகாவுடன் பயணித்த இரண்டு குழந்தைகள், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்கள் என அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். அதன்படி அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ்  ஊழியர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

இதனிடையே இருசக்கர வாகனங்கள் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் மல்லிகா தனது இரண்டு குழந்தைகளுடன்  சாலையை கடக்க முயல்வதும், கல்லூரி மாணவர்கள் வந்த இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதி சிதறுவதும் அதில் அனைவரும் தூக்கி வீசப்படும் பதை பதைக்கும்  காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும் விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்கும் பெண் சாலையை முறையாக கவனிக்காமல் கவனக்குறைவாக கடக்க முற்பட்டதும், கல்லூரி மாணவர்கள் தங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வேகமாக வந்ததுமே விபத்திற்கு காரணம் என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios