கோவையில் திடீரென வாரச்சந்தைக்குள் புகுந்த கார்; 3 பேர் படுகாயம்
கோவை வடவள்ளி பேருந்து நிறுத்தம் அருகே வாரசந்தைக்குள் புகுந்த கார் மோதி காய்கறி வியாபாரத்திற்கு வந்த மூதாட்டி உள்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவை மாவட்டம் வடவள்ளி பேருந்து நிலையம் அருகே ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகளிடம் இருந்து விளை பொருட்கள் நேரடியாக விற்பனை செய்யப்படுவதால் இங்கு காய்களிகள் மலிவாகவும், தரமாகவும் இருக்கும் என்பதால் இந்த சந்தையை பொதுமக்கள் விரும்பி பயன்படுத்துவது உண்டு. மேலும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் வாரநாட்களில் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் இந்த சந்தையை பயன்படுத்திக் கொள்வர்.
இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல சந்தை போடப்பட்டு பொதுமக்கள் வரத் துவங்கிய நிலையில் அவ்வழியாக மருதமலை நோக்கிச் சாலையில் சென்ற கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த சந்தை காய்கறி கடைக்குள் புகுந்தது. இதில் அங்கு இருந்த மூதாட்டி மற்றும் வட மாநில தொழிலாளர்கள் என மூன்று பேர் காயம் அடைந்தனர்.
தமிழ்நாட்டில் அதிக குற்றம் நடைபெறும் 10 ரயில் நிலையங்கள்!
இதைடுத்து அங்கு இருந்தவர்கள் மூவரையும் மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த வடவள்ளி காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை சந்தையில் 6 மணிக்கு மேல் ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளுடன் சந்தைகளுக்கு வருவது வழக்கம், முன்னதாக விபத்து ஏற்பட்டதால் பெரும் அவம்பாவிதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. விபத்து தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டுநரான வடவள்ளியை சேர்ந்த கனிராஜ் (57) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள்: பள்ளிகளில் இன்று இனிப்பு பொங்கல்!