கோவையில் பூங்காவில் விளையாடிய 2 குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்; நிவாகிகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த உயிர்பலி
கோவையில் குடியிருப்பு பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த 2 குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சரவணம்பட்டி - துடியலூர் சாலையில் ராணுவ வீரர்களுக்கான வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் அவர்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் வசித்து வரும் பிரசாந்த் என்பவரின் மூத்த மகன் ஜியான்ஸ் ரெட்டி (வயது 6), பாலச்சந்தர் என்பவரின் மகள் பிரியா (8) ஆகிய இரு குழந்தைகளும் நேற்று மாலை அங்குள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
சறுக்கு விளையாட்டு விளையாடிக்கொண்டு இருத்த போது, எதிர்பாராத விதமாக சேதமடைந்து தொங்கி கொண்டு இருந்த மின் வயரில் இருந்து மின்சாரம் தாக்கி குழந்தைகள் ஜியான்ஸ் ரெட்டி, பிரியா ஆகிய இரு குழந்தைகளும் மயக்கமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து, குழந்தைகள் இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவர்களை சோதித்த பொழுது இருவரும் இறந்து விட்டது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தைகளது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவு குறித்து ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தும், குடியிருப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.