தவெகவில் 7ம் கட்டமாக 6 மாவட்ட பொறுப்பாளர்களை விஜய் நியமனம் செய்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்,
Vijay Appoints 6 District In-Charges In TVK: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும் பாஜக, நடிகர் விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதில் அதிமுக, பாஜக கூட்டணியை உறுதி செய்து விட்டன. திமுகவை காங்கிரஸ், விசிக உள்ளிட்ட ஏற்கெனவே இருக்கும் கூட்டணி கட்சிகளை தக்க வைத்துக் கொள்கிறது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்
2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து அதிகம் எதிர்பார்க்கப்படும் கட்சி நடிகர் விஜய்யின் தவெக தான். திராவிடம், தமிழ் தேசியம் என இரண்டையும் முன்னிலைப்படுத்தி அரசியல் செய்து வரும் விஜய் கூடிய விரைவில் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். விஜய்யின் அரசியல் கொள்கையால் ஈர்க்கப்பட்டு ஏராளமானோர் தவெகவில் இணைந்து வருகின்றனர்.
தவெகவில் இணைந்த முக்கிய பிரபலங்கள்
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜலட்சுமி, ஸ்ரீதரன், திமுக முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வன், ஜேப்பியார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் தலைவர் மரிய வில்சன், முன்னாள் நீதிபதி சுபாஷ் ஆகியோர் தவெகவில் இன்று இணைந்துள்ளனர். இது தவிர விருப்ப ஓய்வு பெற்ற IRS அதிகாரி அருண்ராஜ் தவெகவில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். கட்சியில் இணைந்த உடன் அவருக்கு தவெகவின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
6 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்
தொடர்ந்து தவெகவில் முக்கிய பிரமுகங்கள், அரசியல் தலைவர்கள் இணைந்து வருவது விஜய்யையும், கட்சி நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்தியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் மாவட்ட பொறுப்பாளர்களையும் விஜய் தொடர்ந்து நியமித்து வருகிறார். இதுவரை 6 கட்டமாக தவெகவில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பய்ட்டனர். இந்நிலையில் தவெகவில் 7ம் கட்டமாக 6 மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்
இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ''தமிழக வெற்றிக் கழகத்தில் ஏழாம் கட்டமாக 6 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.