திமுகவை தாக்கி பேசினாலும் காமராஜருக்கு ஏசி அமைத்து கொடுத்ததாக கருணாநிதி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. 

Karunanidhi's Speech He had Provided AC For Kamaraj: பெருந்தலைவர் காமராஜர் குறித்து திமுக எம்.பி.யும், துணை பொதுச்செயலாளருமான திருச்சி சிவா பேசிய விவகாரம் இன்னும் தமிழ்நாட்டில் கொழுந்து விட்டு எரிகிறது. அதாவது ஏசி இருந்தால் தான் காமராஜர் தூங்குவார் என கருணாநிதி தன்னிடம் கூறியதாகவும், தனக்கு பிறகு தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என காமராஜர் கருணாநிதியிடம் கூறியதாகவும் திருச்சி சிவா தெரிவித்து இருந்தது பெரும் சர்ச்சையானது.

காமராஜர் குறித்து பேசிய திருச்சி சிவா

திருச்சி சிவாவின் பேச்சுக்கு காங்கிரஸ், அதிமுக, பாஜக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ''மறைந்த தலைவர்கள் குறித்து கண்ணியத்துடன் பேச வேண்டும்'' என்று அறிவுரை கூறியிருந்தார். ''எளிமையின் இலக்கணமாக திகழும் காமராஜர் ஏசி அறையில் படுத்தாரா? கொஞ்சமாவது நம்பும்படி சொல்ல வேண்டும்'' என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் திருச்சி சிவாவுக்கு எதிர்வினையாற்றினர்.

கருணாநிதி பேசிய பேச்சு வைரல்

இது ஒருபக்கம் இருக்க, 'காமராஜருக்கு ஏசி அமைத்துக் கொடுத்தேன்' என கருணாநிதி திருச்சி சிவாவிடம் கூறியது உண்மையா? என பல்வேறு தரப்பில் இருந்தும் கேள்விகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், காமராஜருக்கு ஏசி அமைத்துக் கொடுத்ததாக கருணாநிதி பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில், ''காமராஜரின் சகோதரன் எந்த அளவுக்கு அவரது இறுதிச்சடங்குகளை ஆற்றுவாரோ, அதைப் போல முதலைமைச்சர் கருணாநிதி பெருந்தலைவர் காமராஜருக்கு உரிய இறுதிச்சடங்குகளை நிறைவேற்றி வைத்தார் என்று குறிப்பிட்டார்கள்.

ஊர் ஊராக சென்று குறைகூறிய காமராஜர்

இன்னொன்று கூட சொல்லுவேன். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் திமுக ஆட்சி நடைபெற்ற காலத்தில் அண்ணா அவர்களுக்கு பிறகு அந்த பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டிருந்த அந்த காலக்கட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் ஒவ்வொரு ஊராக சென்று திமுக ஆட்சியை குறைகூறி பேசி வந்த அந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி. காமராஜர் அவர்களுக்கு அவர்களுடைய உடல் வெப்பம் தாங்காத காரணத்தாலும் வெயில் கொடுமையினால் அவருக்கு பல சங்கடங்கள் ஏற்படுகிறது என்ற காரணத்தாலும் அவர் வெளியூர் சென்று பிரசாரம் செய்ய வேண்டியதுள்ளது.

காமராஜருக்கு ஏசி அமைத்து கொடுக்க சொன்னேன்

ஆனால் செல்லுகிற இடங்களில் அவர் தங்குகிற இடங்கள் குளிர்சாதன வசதிகள் உள்ளவைகளாக இல்லை. எனவே அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ராஜாராம் நாயுடு அவர்கள் என்னிடத்திலே எடுத்து சொன்னார். காமராஜர் அவர்கள் செல்வது கழகத்தை தாக்கிப் பேச. ஆனால் அவர் சென்று தங்குகின்ற ஒவ்வொரு இடத்திலும் அவருடைய உடல்நலம் கருதி ஆங்காங்கு குளிர்சாதன பெட்டிகளை ஒவ்வொரு டிவியிலும் வைத்து தருமாறு நான் ஆணையிட்டவன் தான் இந்த கருணாநிதி என்பதை தேவர் அவர்கள் உணருவார்கள். நல்ல காங்கிரஸ்காரர்களும், நன்றியுள்ள காங்கிரஸ்காரர்கள் அனைவரும் நிச்சயமாக உணர்வார்கள்'' என்று தெரிவித்தார்.

திருச்சி சிவாவை ஆதரிக்கும் திமுகவினர்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இந்த பேச்சு சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பேச்சை வைத்து இப்போது உண்மை புரிகிறதா? என திமுகவினர் திருச்சி சிவாவுக்கு ஆதரவாக பேசத் தொடங்கியுள்ளனர். அதே வேளையில் கருணாநிதி திருச்சி சிவாவிடம் காமராஜர் குறித்து பேசவில்லை என்று சபாநாயார் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.