காமராஜர் குறித்து திருச்சி சிவாவிடம் கருணாநிதி பேசியது குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.

Appavu's Explanation On Trichy Siva's Speech About Kamaraj: திமுக எம்.பி.யும், துணை பொதுச்செயலாளருமான திருச்சி சிவா, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் குறித்து பேசியது பெரும் சர்ச்சையானது. அதாவது ஏசி இருந்தால் தான் காமராஜர் தூங்குவார் என கருணாநிதி தன்னிடம் கூறியதாகவும், தனக்கு பிறகு தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என காமராஜர் கருணாநிதியிடம் கூறியதாகவும் திருச்சி சிவா தெரிவித்து இருந்தார்.

காமராஜர் குறித்து பேசி வாங்கி கட்டிக்கொண்ட திருச்சி சிவா

திருச்சி சிவாவின் கருத்துக்கு காங்கிரஸ், அதிமுக, பாஜக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இவ்வளவு ஏன் திமுக தரப்பில் இருந்தும் சில பேர் திருச்சி சிவாவின் பேச்சை ரசிக்கவில்லை. தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ''மறைந்த பெரும் தலைவர்கள் குறித்து கன்னியமான முறையில் கருத்து தெரிவிக்க வேண்டும் கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்'' என்று திருச்சி சிவா பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்தார்.

மன்னிப்பு கேட்க மறுக்கும் திருச்சி சிவா

''பெருந்தலைவர் காமராஜர் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்க வேண்டாம்'' என திருச்சி சிவா விளக்கம் அளித்து இருந்தாலும் அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

உனக்கு தமிழ் தெரியுமா? சபாநாயகர் அப்பாவு ஆவேசம்

அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர் காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசியது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, ''மறைந்த தலைவர்கள் குறித்து பேசுவது மிகவும் தவறு''என்றார். அப்போது கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் 'அப்ப நீங்க திருச்சி சிவா பேசியது தவறு என ஒத்துக் கொள்கிறீர்களா?'' என்று கேட்டார். உடனே சபாநாயகர் அப்பாவு, ''உனக்கு தமிழ் தெரியும் தானே தம்பி! நான் சொன்னது எல்லாம் உனக்கு புரிஞ்சுதா? இல்லையா?'' என்றார். உடனே அந்த பத்திரிகையாளர் அப்ப திருச்சி சிவா பேசியது தவறு என சொல்கிறீர்கள் அப்படித்தானே என்றார்.

மறைந்த தலைவர்களை அநாகரீகமாக பேசக் கூடாது

அதற்கு அப்பாவு, 'நான் பேசியது உங்களுக்கு புரிந்திருக்கும்' என்றார். தொடர்ந்து பேசிய அப்பாவு, ''தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசக் கூடாது. இது அவருக்கு (திருச்சி சிவா) மட்டுமல்ல. சீமான் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் மறைந்த தலைவர்கள் குறித்து அநாகரீகமான வார்த்தையை பயன்படுத்துவது அவசியமில்லை. அந்த தலைவர்கள் செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்'' என்றார்.

திருச்சி சிவாவிடம் கருணாநிதி சொன்னது என்ன?

தொடர்ந்து பத்திரிகையாளர், 'கருணாநிதி சொன்னதால் தான் நான் பேசினேன் என்று திருச்சி சிவா கூறியிருக்கிறாரே' என்று கேட்டபோது, இதற்கு பதில் அளித்த சபாநாயர் அப்பாவு, ''இப்போது கருணாநிதி இல்லையே இது குறித்து சொல்வதற்கு. ஆனால் கருணாநிதி அப்படி சொல்லவே இல்லை'' என்று தெரிவித்தார். மேலும் திமுகவினரின் கட்டுக்கதைகளால் தான் காமராஜர் வீழ்த்தப்பட்டார் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பேசியது குறித்து கேட்டபோது, ''அதை அவரிடமே கேளுங்கள்'' என்று அப்பாவு தெரிவித்தார். தொடர்ந்து 'திருச்சி சிவா பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கூறியிருக்கிறார்களே' என பத்திரிகையாளர் கேட்டபோது, ''இந்த கேள்விக்கு சம்பந்தப்பட்டவர் (திருச்சி சிவா) தான் பதில் சொல்ல வேண்டும்'' என்றார்.