மு.க.முத்துவை தந்தை கருணாநிதியே கைது செய்தார் என்று அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.

MK Muthu Arrested By Karunanidhi: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். தமிழ்நாடு முதல்வரும், அவரது சகோதரருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என ஏராளமானோர் மு.க.முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து தொடர்ந்து சென்னை பெசண்ட் நகர் மின் மயானத்தில் மு.க.முத்து உடல் தகனம் செய்யப்பட்டது.

மு.க.முத்து குறித்து பேசிய டாக்டர் காந்தராஜ்

நடிகராக மட்டுமின்றி பாடகராகவும் மு.க.முத்து விளங்கினார். இந்நிலையில், அரசியல் விமர்சகரான டாக்டர் காந்தராஜ் மு.க.முத்துவுக்கும் தனக்கும் உள்ள உறவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், ''மு.க.முத்துவுக்கும் எனக்கும் உள்ள உறவு பெரிய உறவு. என்னை அவர் ஒரு மூத்த அண்ணனாகத் தான் நினைத்தார். கட்டுப்படுத்த முடியாத தருணங்களில் அவர் என்னிடம் தான் வருவார். அவருக்கு பிரச்சனை ஏற்பட்டால் எனக்கு கடிதம் எழுதுவார். மு.க.முத்துவிடம் பிரச்சனை ஏற்பட்டால் கருணாநிதி என்னை தான் சொல்லி அனுப்புவார். என்ன காரணமோ தெரியாது. ஆனால் நான் சொன்னதை மு.க.முத்து அப்படியே கேட்பார்'' என்றார்.

மு.க.முத்துவை கைது செய்த கருணாநிதி

தொடர்ந்து கருணாநிதியே தனது மகனை கைது செய்தது குறித்து பேசிய காந்தராஜ், ''ஒரு முறை கருணாநிதி வீட்டில் ஒரு பெரிய பிரச்சைனை ஏற்பட்டபோது மு.க.முத்து கைது செய்யப்பட்டார். கருணாநிதி முதல்வராக இருக்கும்போதே கைது செய்யப்பட்டார். நான் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்தபோது எங்கள் டிபார்ட்மெண்ட்டில் போலீசுடன் மு.க.முத்து உள்ளார். என்னை கைது செய்து விட்டதாக அவர் கூறினார். உடனே நான் எனது டீனிடம் பேசி அவரை (மு.க.முத்துவை) எனது வார்டில் அட்மிட் பண்ணினேன். அட்மிட் செய்தால் அவரை கைது செய்ய முடியாது.

கருணாநிதியிடம் பேசி காப்பாற்றினேன்

இதனைத் தொடர்ந்து நான் கருணாநிதி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் பேசி வழக்கை வாபஸ் பெற வைத்து மு.க.முத்துவை காப்பாற்றினேன். அதில் இருந்து எல்லா பிரச்சனைக்கும் என்னிடம் தான் வருவார். எனது அண்ணன் ராஜாராம் அதிமுகவில் இருந்தபோது மு.க.முத்துவின் மகள் திருமணம் நடந்தது. நான் அந்த திருமணத்தில் கலந்து கொண்டேன். பின்பு மு.க.முத்துவின் உடல்நலம் சரியில்லாததால் அவரை திருவாருரூக்கு அழைத்து சென்றனர். அதன்பின்பு எங்கள் இருவருக்கும் இடையே பெரிய அளவில் தொடர்பு இல்லை'' என்று தெரிவித்தார்.

குடிப்பழக்கத்தால் நோயில் வீழ்ந்தார்

தொடர்ந்து பேசிய காந்தராஜ், ''என் மீது மு.க.முத்து அன்பும், பிரியமும் கொண்டவர். நன்றாக பாடுவார். பன்முகத்திறன் கொண்டவர். ஆனால் எம்.ஜி.ஆருக்கு போட்டியாக களமிறக்கி மு.க.முத்துவை காலி செய்து விட்டனர். ஒருமுறை மு.க.முத்து எம்.ஜி.ஆரிடம் போய் நின்றபோது எம்.ஜி.ஆர் கருணாநிதியிடம் போன் போட்டு அவரை அனுப்பி வைத்தார். மு.க.முத்து குடிப்பழக்கத்தால் நோயில் வீழ்ந்தார். மு.க.முத்து சென்னையில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியாது. தெரிந்து இருந்தால் முன்பே நேரில் சென்று பார்த்திருப்பேன். எனக்கு எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் தொடர்பு உண்டு. ஆனால் அவர்கள் என்னை ஒரு மனுசனா கூட மதித்ததில்லை'' என்று பேசி முடித்தார்.