தமிழகத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போர் யாரிடமும் உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது  என தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வாடகை கேட்டு காலி செய்ய கட்டாயப்படுத்தினால் வீட்டு உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பீதியால் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். மேலும்,தொழிலாளர்கள் மற்றும் கூலிப் பணியாட்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் மக்களின் பொருளாதார பாரத்தைக் குறைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதேபோல், இடம்பெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தேவையான வசதிகளையும் அரசுகள் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், தமிழகத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போர்களிடம் உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு தடை விதித்துள்ளது.  அத்துடன், வெளிமாநிலத் தொழிலாளர்கள், மாணவர்களிடம் வீட்டு வாடகை கேட்டுக் கட்டாயப்படுத்தினால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதேபோல், வீட்டை காலி செய்யுமாறு நிர்பந்திக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.