Asianet News TamilAsianet News Tamil

ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

கொரோனா ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், சம்மந்தப்பட்டவர்களின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

chennai high court order to cancel license who violate corona curfew
Author
Chennai, First Published Apr 8, 2020, 3:34 PM IST

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்துவருகிறது. 5300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா சமூக தொற்றாக பரவுவதை தடுக்க, வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருவதால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடந்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தவும், கொரோனாவிலிருந்து மக்களை காக்கவும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அரசு தீர்மானித்தால், ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. 

ஆனால் கொரோனாவின் தீவிரத்தை உணராமல் சிலர், அத்தியாவசிய பொருட்கள் வாங்கச்செல்வதாக கூறியும் வேறு சில பொய்யான காரணங்களை கூறியும் பொதுவெளியில் சுற்றி திரிகின்றனர். தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இதே நிலை இருந்தது. 

chennai high court order to cancel license who violate corona curfew

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஆரம்பத்தில், வெளியே சுற்றுபவர்களிடம், தனிமைப்படுதலின் அவசியத்தை எடுத்துணர்த்தியதுடன், நூதன தண்டனை  கொடுத்து அனுப்பி கொண்டிருந்த தமிழக போலீஸார், அதன்பின்னர் வாகனங்களை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது, வழக்குப்பதிவு செய்து கைது செய்வது என அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

ஊரடங்கை சீரியஸாக நினைத்து பின்பற்றுமாறும், அப்படியில்லாமல் பொதுவெளியில் மக்கள் கூட்டம் கூடினாலோ சமூக விலகலை கடைபிடிக்க தவறினாலோ, ஊரடங்கு கடுமையாக்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும் மக்கள் கொரோனாவை பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஆங்காங்கே கறி வாங்குவதற்கு குவிந்தனர். மக்கள் இதுபோன்று அலட்சியமாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

chennai high court order to cancel license who violate corona curfew

தமிழ்நாட்டில் இதுவரை ஊரடங்கை மீறி சுற்றியதால், 87 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்களை போலீஸ் பறிமுதல் செய்துள்ள நிலையில், ஒரு லட்சத்து 3 ஆயிரம் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்து 13 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்துள்ளனர். 

இந்நிலையில், கொரோனா தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருணாகரன் மற்றும் ஹேமலாத அடங்கிய அமர்வு, ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கை பறிமுதல் செய்வதுடன் சம்மந்தப்பட்டவர்களின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்யலாம் என தெரிவித்துள்ளது. 

மேலும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் பிரதமரும், முதல்வரும் கேட்டுக்கொண்டே இருக்கமுடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios