ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார். 

சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வலம்வந்துகொண்டிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் ரன்களை குவித்துவருவதால், ரன் மெஷின் என அழைக்கப்படுகிறார். சாதனைகளையும் சதங்களையும் குவித்துவரும் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விராட் கோலி தலைசிறந்த வீரர் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது. ஒருநாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் கோலி தொடர்ந்து வருகிறார். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்டகாலமாக இந்திய வீரர் யாரும் முதலிடத்தை பிடிக்கவில்லை. கடந்த 2011ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருந்தார். அதன்பிறகு எந்த இந்திய வீரரும் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடிக்கவில்லை. 

இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தரவரிசையில் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் கோலி சிறப்பாக ஆடினார். முதல் இன்னிங்ஸில் சதமடித்த கோலி, இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார். 

இந்த போட்டியில் சிறப்பாக ஆடியதன் விளைவாக 934 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில், ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் கோலி. சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கவுதம் கம்பீர், சுனில் கவாஸ்கர், விரேந்திர சேவாக் மற்றும் திலிப் வெங்சர்கார் ஆகியோர் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.