அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். இதுவரை ஜோகோவிச் ஒட்டுமொத்தமாக 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்தியுள்ளார். 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவர்  பிரிவின் இறுதிப்போட்டியில் 2 முறை சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான செர்பியா நாட்டைச் சேர்ந்த ஜோகோவிச், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோவை மோதினார்.

95 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 6-3, 7-6, 6-3 என்ற நேர்செட் கணக்கில் டெல்போட்ரோவை தோற்கடித்து 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். மேலும் 14-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் பெற்றிருக்கும் ஜோகோவிச், பெடே சாம்ப்ராஷ் சாதனையை சமன் செய்தார்.

 

இதுவரை அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்களின் பட்டியலில் சுவிச்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார். ரபேல் நடால் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். முன்னதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.