தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி வீரருமான டிவில்லியர்ஸ், அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் உலக கோப்பை நடக்க உள்ள நிலையில், டிவில்லியர்ஸின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களையும் தென்னாப்பிரிக்க அணியையும் அதிர்ச்சியடைய செய்தது. 

தனது அபாரமான பேட்டிங் திறமையால் உலகளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் டிவில்லியர்ஸ். இந்தியாவில் அவருக்கென பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. மைதானத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பந்தை பறக்கவிடுவதால் 360 டிகிரி என டிவில்லியர்ஸ் அழைக்கப்படுகிறார் டிவில்லியர்ஸ். 

ஐபிஎல்லில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியில் ஆடிவருகிறார். மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான டிவில்லியர்ஸை அதிகமுறை வீழ்த்திய பவுலர் யாரென்ற தகவல் கண்டிப்பாக வியப்பை ஏற்படுத்தும். 

டிவில்லியர்ஸை அதிகமுறை வீழ்த்தியது இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட் தான். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் டிவில்லியர்ஸை 10 முறை வீழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 12 முறை டிவில்லியர்ஸை வீழ்த்தியுள்ளார் பிராட். பிராடுக்கு அடுத்தபடியாக அதிகமுறை வீழ்த்தியவர் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன். இவர் டிவில்லியர்ஸை 8 முறை வீழ்த்தியுள்ளார். 

இந்திய அணியின் ஜடேஜாவும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அஃப்ரிடியும் டிவில்லியர்ஸை தலா 7 முறை வீழ்த்தியுள்ளனர்.