லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றது குறித்து சேவாக் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 

இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் வீசிய ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து படுதோல்வி அடைந்தனர். இந்த போட்டி முழுவதுமே இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் ஒருமுறை கூட போட்டி வரவில்லை. 

இந்த போட்டியில் இந்திய அணி தோற்றது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக், இந்திய அணி மோசமாக ஆடியது. அணி சரியாக ஆடாதபோது, ஆதரவு அளிக்க வேண்டும். ஆனால் போராடவே இல்லாமல் தோற்றது, போட்டியை பார்க்கும்போது மிகவும் அதிருப்தியடைய செய்தது. எனினும் அணியினர் நம்பிக்கையுடனும் மன வலிமையுடனும் அடுத்த போட்டியில் மீண்டெழுவார்கள் என நம்புகிறேன் என சேவாக் பதிவிட்டுள்ளார்.