இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்னைக்கு இன்னும் நிரந்தர தீர்வு காணப்படவில்லை. ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி என இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் மிகவும் வலுவாக உள்ளன. ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மிடில் ஆர்டருக்கு சரியான வீரர்களை தேர்வு செய்யும் பரிசோதனை முயற்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. ஆனால் இன்னும் தீர்வு காணப்படவில்லை. 

கே.எல்.ராகுல் நல்ல ஃபார்மில் உள்ளதால், அவர் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் களமிறக்கப்படுவார். தோனியும் ஹர்திக் பாண்டியாவும் 6 மற்றும் 7வது வரிசையில் களமிறங்குகின்றனர். எனவே 5வது இடத்திற்கான வீரர் தேர்விற்கான பரிசோதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

தற்போது அந்த வரிசையில் ரெய்னா ஆடிவருகிறார். ஆனால் ரெய்னா அண்மைக்காலமாக பெரிய இன்னிங்ஸ் ஆடமுடியாமல் திணறிவருகிறார். அதேநேரத்தில் நிதாஹஸ் டிராபி, ஐபிஎல் ஆகியவற்றில் தனது திறமையை மீண்டும் நிரூபித்த தினேஷ் கார்த்திக், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மேலும் அவர் நல்ல ஃபார்மிலும் உள்ளார். 

எனவே ஒருநாள் அணியில் ரெய்னாவை விட தினேஷ் கார்த்திக் தான் சரியான தேர்வாக இருப்பார். தினேஷ் கார்த்திக் நல்ல ஃபார்மில் உள்ளார்; அவரது ஃபார்மை இந்திய அணி பயன்படுத்தி கொள்ள இதுதான் சரியான தருணம் என சேவாக் கருத்து தெரிவித்திருந்தார்.

அதே கருத்தை முன்னாள் வீரர் கவுதம் காம்பீரும் தெரிவித்திருந்தார். வேகப்பந்து மற்றும் சுழல் பந்து ஆகிய இரண்டுவிதமான பந்துகளையும் திறம்பட கையாளக்கூடிய தினேஷ் கார்த்திக் தான் ரெய்னாவை விட சிறந்த நடுவரிசை வீரர். எனவே என்னுடைய தேர்வு தினேஷ் கார்த்திக் தான் என காம்பீர் தெரிவித்திருந்தார். 

மிடில் ஆர்டர் பிரச்னைக்கு முடிவு எட்டப்படாத நிலையில், பல முன்னாள் வீரர்களின் கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ரெய்னாவிற்கு முன்னுரிமை கொடுப்பதற்கான காரணத்தை இந்திய அணியில் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்தார். 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சஞ்சய் பங்கார், மிடில் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் தேவை என்பதால் தான், தினேஷ் கார்த்திக்கை விட ரெய்னாவிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என தெரிவித்தார். 

எந்த கை பேட்டிங் என்பது முக்கியமில்லை. ஒருநாள் போட்டிக்கான நடு வரிசையில் ஆட, ரெய்னாவைவிட தினேஷ் கார்த்திக் தான் சிறந்த தேர்வு என்பதே கிரிக்கெட் ஆலோசகர்களின் கருத்தாகவும் உள்ளது.