Asianet News Tamil

”வெற்றி பெற தேவை தெளிவு; தன்னம்பிக்கை அல்ல” - சத்குருவுடன் பி.வி.சிந்து விறுவிறுப்பான கலந்துரையாடல்

ஒரு விஷயத்தை பற்றிய தெளிவு இல்லாதபோதுதான், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கிறோம். வெற்றி பெறுவதற்கு தன்னபிக்கையை விட தெளிவுதான் முக்கியம் என சத்குரு தெரிவித்துள்ளார்.

sadhguru shares interesting and amazing thoughts with pv sindhu in online chat
Author
Chennai, First Published May 26, 2020, 4:37 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் செல்வி.பி.வி.சிந்து. அவர் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுடன் ஆன்லைனில் கலந்துரையாடினார்.

அப்போது, விளையாட்டு, வெற்றி, தன்னம்பிக்கை, கூச்ச சுபாவம், அதிர்ஷ்டம், புறத்தோற்றம், நல்ல நாள் – கெட்ட நாள், ஆன்லைனில் பாடம் நடத்தும் முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு என பல்வேறு விஷயங்களை மிகுந்த ஆர்வத்துடன் கேள்விகளாக முன் வைத்தார்.

அதற்கு சத்குரு அவர்கள் அளித்த பதில்களின் சுருக்கமான தொகுப்பு:

பல வருடங்களுக்கு, முன்னர் ஒரு முறை சென்னை விமான நிலையத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தேன். அப்போது இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் செயலாளர் வந்து, ’சத்குரு நம் இந்திய ஹாக்கி அணியினர் சாம்பியன் டிராப்பிக்காக ஜெர்மனி செல்கின்றனர். நீங்கள் வந்து அவர்களுடன் சற்று உரையாட முடியுமா?’ என கேட்டார்.

நான் அவர்களை பார்க்க சென்ற போது, ஒரு உளவியல் நிபுணர் ஒருவர் அவர்களுக்கு அறிவுரை வழங்கி கொண்டிருந்தார். அவர், ”உங்கள் பெற்றோரின் கெளரவம் உங்கள் தோள்களில் உள்ளது, தேசத்தின் கெளரவம் உங்கள் தலை மீது உள்ளது” என்பது போன்ற அறிவுரைகளை வழங்கி கொண்டிருந்தார்.

நான் இந்த சித்ரவதையை பார்த்துவிட்டு, பின்னர் அவர்களிடம் பேசும் போது சொன்னேன். “உங்களுக்கு உண்மையிலேயே சிறப்பாக ஹாக்கி விளையாட தெரிந்தால், பந்தை கோல் அடிப்பது எப்படி என்று மட்டும் சிந்தியுங்கள். உங்கள் தேசம் பற்றியோ, பெற்றோர் பற்றியோ எல்லாம் கவலைபடாதீர்கள்” என்றேன். 

இதேபோல், இன்னொரு உரையாடலில் “கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை எப்படி வீழ்த்துவது?” என கேட்டார்கள்.  அப்போது நான் சொன்னேன்.  “பாகிஸ்தானை வீழ்த்துவதை இந்திய ராணுவம் பார்த்து கொள்ளும். நீங்கள் பந்தை மட்டும் அடித்தால் போதும்” என்றேன்.

இது போன்ற உணர்ச்சிகளால் தான் பல முட்டாள்தனங்கள் நிகழ்கின்றன. பல விளையாட்டு வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினால் வென்று விடலாம் என நினைக்கின்றனர். உண்மையில் அது சாத்தியமில்லை. 

நீங்கள் ஆனந்தமான, மகிழ்ச்சியான நிலையில் இருக்கும் போது தான் உங்களின் உடல் மனம், உணர்ச்சி, மூளை என அனைத்தும் அதன் உச்சபட்ச திறனுடன் செயல்படும். இதற்கு ஏராளமான அறிவியல்பூர்வ சான்றுகள் உள்ளன.

வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு தான் உள்ளது. எப்போது உங்களுக்குள் தெளிவு இல்லையோ அப்போது நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள முயற்சிக்கிறீர்கள். ஒரு விஷயத்தை உங்களால் முழுமையாக அது இருக்கும் விதத்திலேயே பார்க்க முடிந்தால் உங்களுக்கு தன்னம்பிக்கை தேவையில்லை. அந்த விஷயம் குறித்த தெளிவுதான் தேவை. அத்தகைய தெளிவு இருந்தால் நீங்கள் உங்களால் முடிந்த சிறந்ததை கட்டாயம் தானாகவே செய்வீர்கள். 

என்றோ ஒரு நாள் நல்ல விஷயம் செய்பவர்கள் தான் நல்ல நாள், கெட்ட நாள் பற்றி பேசுவார்கள். ஒவ்வொரு நாளும் நல்ல விஷயங்களை செய்பவர்களுக்கு எல்லா நாளும் நல்ல நாள் தான். நிறைய பேர் வாய்ப்பினால் தான் வெற்றிகரமான மனிதர்களாக இருக்கிறார்கள். அவர்களின் சொந்த திறனால் அல்ல. தந்தையின் பணம் செல்வாக்கால் வெற்றிகரமாக இருக்கிறார்கள். தங்கள் திறமையால் வெற்றிகரமாக இருப்பவர்கள் இதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்த தேவையில்லை என்று சத்குரு பேசினார்.

அந்த கலந்துரையாடல் வீடியோ இதோ..

விளையாட்டு துறையைச் சேர்ந்த பி.வி.சிந்து மட்டுமின்றி, காவல்துறையைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் திரு.ரவி, திரு.அண்ணாமலை, சி.ஐ.ஐ, ஃபிக்கி, TiE, கிரெடாய் போன்ற தொழில் துறை அமைப்புகளைச் சேர்ந்த வர்த்தக தலைவர்கள், டி.ஆர்.டி.ஓ உயர் அதிகாரிகள், ஹார்வர்டு, கொலம்பியா, ஸ்டான்ஸ்ஃபோர்டு உள்ளிட்ட சர்வதேச பல்கலைக்கழகங்களின் புகழ்பெற்ற மருத்துவர்கள், மத்திய திரைப்பட தணிக்கை குழுவின் தலைவர் திரு.பிரசூன் ஜோஷி, தமிழ் திரைப்பட நடிகர் திரு.சந்தானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுடன் சத்குரு லாக் டவுன் காலத்தில் கலந்துரையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios