இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி சிறப்பாக ஆட உள்ளதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

அடுத்த ஆண்டு உலக கோப்பை இங்கிலாந்தில் நடைபெற உள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் அதன் முன்னோட்டமாக பார்க்கப்படுவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. டி20 தொடரில் சிறப்பாக ஆடி இந்திய அணி தொடரை வென்றது. அதேபோல ஒருநாள் தொடரையும் வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுமே சிறந்த அணிகள் என்பதால் போட்டி கண்டிப்பாக கடுமையாக இருக்கும். இந்நிலையில், இந்த தொடர் குறித்து பேசியுள்ள தொடக்க வீரர் ரோஹித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை நான் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன். எனவே தொடக்கம் முதலே மிக கவனத்துடன் சிறப்பாக ஆட வேண்டும் என நினைக்கிறேன்.

ஐபிஎல் தொடரிலிருந்தே நான் பெரியளவில் ஆடவில்லை. அதனால் இந்த தொடரில் சிறப்பாக ஆடி எனது பேட்டிங்கில் மீண்டும் சிறந்த நிலையை அடைய விரும்புகிறேன். இந்த தொடரிலேயே அதை அடைவேன் என்று நம்புகிறேன் என ரோஹித் சர்மா தெரிவித்தார்.

ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் சர்மா ஆடவில்லை. எனினும் அதன்பிறகு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடி தனது திறமையை மீண்டுமொரு முறை நிரூபித்தார். பெரிய இன்னிங்ஸ்களை ஆடுவதை வல்லவரான ரோஹித் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக ஆட நம்பிக்கை தெரிவித்திருப்பது இங்கிலாந்தை மிரட்சியடைய செய்துள்ளது.