இந்திய பேட்மிண்ட்டன் வீராங்கனை பிவி சிந்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளையும் பதக்கங்களையும் வென்று பெருமையை தேடிக்கொடுத்துள்ளார். சர்வதேச அளவில் 6வது இடத்தில் இருக்கும் பிவி சிந்து பதிவிட்ட டுவீட்டால், அவர் பேட்மின்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக சர்ச்சை எழுந்தது..

பிவி சிந்து பதிவிட்ட டுவீட்டில், டென்மார்க் ஓபன் போட்டிதான் இறுதி. நான் ஓய்வு பெறுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த டுவிட்டை பார்த்து பலரும் அவர் சர்வதேச பேட்மின்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்று தவறாக நினைத்தனர். ஆனால் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை பிவி சிந்து எடுக்கவில்லை.

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், கடந்த சில நாட்களாக நான் என் மனதில் எழும் உணர்வுகளுடன் போராடி வருகிறேன். எனக்கு தவறான எண்ணங்கள் வந்துகொண்டு இருக்கிறது. அதனால்தான் நான் இதை எழுதுகிறேன். இதை படிக்கும்போது நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் படித்து முடிக்கும்போது, என்னுடைய எண்ணம் சரிதான் என்று நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன். இந்த கொரோனா பெருந்தொற்று என் கண்ணை திறந்துவிட்டது. எனக்கு எதிரில் இருக்கும் எதிரணி வீரர்களை என்னால் எளிதாக வீழ்த்த முடியும்.

ஆனால் கண்ணுக்கு தெரியாமல் உலகத்தை ஆட்டிப்படைக்கும் இந்த கொடூர கொரோனா வைரஸை எப்படி வீழ்த்துவது என்று தெரியவில்லை. இணையத்தில் இது தொடர்பாக நான் படிக்கும் செய்திகள் இதயத்தை உலுக்கும் வகையில் இருக்கிறது. கொரோனா காரணமாக மக்கள் படும் கஷ்டங்களை படித்து வருகிறேன். இப்போது என்னால் டென்மார்க் பேட்மின்டன் தொடரிலும் பங்கேற்க முடியவில்லை. மோசமான மற்றும் எதிர்மறை எண்ணங்களும் விஷயங்களும் என்னை சூழ்ந்திருக்கிறது. இந்த எதிர்மறை எண்ணங்களில் இருந்து நான் ஓய்வு பெற விரும்புகிறேன். இன்றோடு நான் எதிர்மறை எண்ணங்கள், அச்சங்களிலிருந்து ஓய்வுபெற போகிறேன். 

உங்களுக்கு நான் சின்ன ஹார்ட் அட்டாக் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கிறேன். ஆனால் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இப்படி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. டென்மார்க் போட்டி நடக்கவில்லை. அதற்கு பதிலாக நான் கண்டிப்பாக ஆசிய பேட்மிண்டன் போட்டிகளில் ஆடுவேன்; நான் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று பிவி சிந்து குறிப்பிட்டுள்ளார். வெறும் தலைப்பை கண்டு பரபரப்பாகிய ரசிகர்கள், முழுவதுமாக படித்தபின்னர் தான் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.