லண்டனில் நடந்துவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் ’முதல் ஆட்டம்’ வரும் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று துவங்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக எச்சரித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

உலகக்கோப்பையின் 22வது போட்டியாக ஞாயிறன்று நடக்கவிருக்கும் போட்டியில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி தனது கிளவுஸில் ராணுவ முத்திரையைப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஒவ்வொரு விக்கெட் விழும்போதும் ஒவ்வொரு வகையான சேஷ்டைகளை செய்ய பாக் அணியினர் முடிவு செய்திருந்தனராம். இதற்கு அவர்கள் பாக் கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டபோது அனுமதி கிடைக்கவில்லையாம்.

அத்தோடு நில்லாமல், பாக். வீரர்களின் சூழ்ச்சியை கிரிக்கெட் வாரியம் பிரதமர் இம்ரானிடமும் போட்டுக்கொடுத்துவிடவே, தனது நாட்டு வீரர்களைக் கடுமையாக எச்சரித்த இம்ரான் கான்,’எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்திய பின் எந்தவிதமான கிறுக்குத்தனங்களிலும் ஈடுபடக்கூடாது. விளையாட்டில் வெற்றியை விட நாகரிகமாக நடந்துகொள்வது முக்கியமானது’என எச்சரித்திருக்கிறாராம்.