நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டியில் இந்திய வீரர் குகேஷ் 2வது வெற்றியைப் பதிவு செய்து அசத்தி உள்ளார். மேலும் இந்த வெற்றியின் மூலம் தொடரில் தனது நிலையையும் உறுதிப்படுத்தி உள்ளார்.

நார்வேயின் ஸ்டாவஞ்சர் நகரில் நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் உலக சாம்பியன் குகேஷ், அர்ஜூன் எரிகைசி மற்றும் மாக்னஸ் கார்ல்சென் (5 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர்) உள்பட 6 முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

முதல் 2 சுற்று போட்டிகளில் தோல்வியைத் தழுவிய இந்திய வீரர் குகேஷ் 3வது சுற்றில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவைத் தோற்கடித்து வெற்றிப் பாதைக்கு திரும்பினார். இதனைத் தொடர்ந்து 4வது சுற்றில் குகேஷ் அமெரிக்க கிராண்மாஸ்டர் பாபியானோ கருனா உடன் மோதினார். இந்தப் போட்டியில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய நிலையில் ஆட்டம் டிரா ஆனது. இதனைத் தொடர்ந்து வெற்றியாளரை கண்டறியும் நோக்கில் டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.

இந்த போட்டியில் குகேஷ் வெற்றி பெற்று அசத்தி உள்ளார். இதன் மூலம் குகேஷ் தொடர்ந்து 2வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். 4வது சுற்று முடிவில் கார்ல்சென் 8 புள்ளிகளுடன் 1வது இடத்திலும், பாபியானோ கருனா 7 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஹிகாரு நகமுரா 5.5 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், குகேஷ் மற்றும் அர்ஜூன் எரிகைசி 4.5 புள்ளிகளுடன் அடுத்த 2 இடங்களில் உள்ளனர்.