இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம்வந்த தோனி, இந்திய அணிக்கு மூன்றுவிதமான கோப்பைகளையும் வென்று கொடுத்ததோடு, டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை முதலிடத்திற்கு கொண்டு சென்றார். 

இவ்வாறு வெற்றிகரமான கேப்டனாக வலம்வந்த தோனி, கடந்த ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். அதன்பிறகு விராட் கோலி கேப்டனானார்.

தோனி விட்டுச்சென்ற கேப்டன் பணியை கோலி செவ்வனே செய்துவருகிறார். இருவரின் அணுகுமுறையும் வெவ்வேறாக இருந்தாலும் கோலியும் அவரது பாணியில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றிகளை தேடித்தந்து வெற்றிகரமான கேப்டனாக வலம்வருகிறார்.

இந்நிலையில், கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கோலி தலைமையிலான இந்திய அணி, முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் கோலி தலைமையில் இந்திய அணி, 50 ஒருநாள் போட்டிகளில் 39ல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதுதான் ஒரு கேப்டனின் தலைமையிலான அணி, முதல் 50 ஒருநாள் போட்டிகளில் பெற்ற அதிகமான வெற்றி. கோலிக்கு முன்னதாக கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஆகியவை முதல் 50 ஒருநாள் போட்டிகளில் 39 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

தற்போது அதை கோலி கேப்டன்சியில் இந்திய அணி சமன் செய்துள்ளது. தோனி, அவர் கேப்டனாக வழிநடத்திய முதல் 50 போட்டிகளில் இத்தனை வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததில்லை. எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த கேப்டனாக அறியப்படும் கிளைவ் லாயிட், ரிக்கி பாண்டிங் ஆகியோர் தலைமையிலான சாதனையை கோலி சமன் செய்துள்ளார்.