தமிழகத்தின் பொக்கிஷமாகவும் மக்களை காக்கிற தாயாகவும்  உள்ள காவேரி ஆற்றை காக்க ஒன்றிணைவோம் என இந்திய கிரிக்கெட் சுழற்பந்து விச்சாளர் ஹர்பஷன் சிங் பேசி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. 

நதிகளை மீட்போம்  இயக்கத்தின் 2-வது களப்பணியாக தென்னிந்தியாவின் உயிர் நாடியாக விளங்கும் காவிரியை மீட்பதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ‘ஈஷா’ அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ளார்.இவ்வியக்கத்தின் மூலம் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் காவேரி வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்களை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மரக் கன்றுகள் உற்பத்தி செய்வதற்காக பொதுமக்களிடம் இருந்தும் நிதி திரட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு பெறப்படும் நிதியை ஈஷா அறக்கட்டளை நிர்வகிக்கபோவது இல்லை. 

அதற்காக நீதிபதிகள் தலைமையில் ஒரு குழு அமைத்து அது நிர்வகிக்கப்படும் என்றும் அதற்கு தமிழ்நாடு மற்றும் கர்நாடாக  மாநில அரசும், மக்களும்  ஒத்துழைக்க வேண்டும் என்றும்  ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தி உள்ளார். அவரின் அழைப்பிற்கு மாநில எல்லைகள் கடந்து பல்வேறு பிரபலங்கள் காவேரி நதிக்காக குரல் கொடுத்து வருகின்றனர். இந்ந நிலையில் தான் ஒரு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்தவராக இருந்தாலும் தமிழக மக்களுடன் அதிக நெருக்கம் காட்டிவருபவரும், தமிழர்களுக்கு தமிழிலேயே டுவிட் செய்து பழகக்கூடியவருமான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான ஹர்பஜன் சிங் காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

அது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார் அதில்  ”தமிழகத்துக்கு ஒரு பொக்கிஷமா மக்கள காக்குற தாயா இருக்குத் காவேரி ஆறு. அழிஞ்சுபோற ஆபத்துல இருக்குற காவேரிய மீட்டெடுக்க ஒரு நம்பிக்கையா வந்திருக்கு காவேரி கூக்குரல்! நம்ம காவேரிய காப்பாத்தணும்! என்னுடன் அதற்கு ஆதரவு தாருங்கள்” என்று பேசியுள்ளார். அவரின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தின் காவேரிக்காக குரல் கொடுத்துள்ள ஹர்பஜன் மீது தமிழ் ரசிகர்களின் பாசம் அதிகமாகி உள்ளது.