ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியதால் பிக்பேஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணி, வாட்சனுடனான ஒப்பந்தத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. 

ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2015ம் ஆண்டு ஓய்வுபெற்றார். தற்போது லீக் போட்டிகளில் ஆடிவருகிறார். பிக்பேஷ் லீக், ஐபிஎல், பாகிஸ்தான் லீக், கரீபியன் பிரீமியர் லீக் ஆகிய தொடர்களில் வாட்சன் ஆடிவருகிறார்.

 

ஐபிஎல் 11வது சீசனில் தோனி தலைமையிலான சென்னை அணியில் வாட்சன் ஆடினார். சென்னை அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதற்கு வாட்சன் முக்கிய பங்கு வகித்தார்.

15 போட்டிகளில் ஆடி இரண்டு சதங்களுடன் 555 ரன்களை குவித்தார். சீசன் முழுவதும் சிறப்பாக ஆடினாலும், ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதி போட்டியில் அவர் ஆடியது மறக்க முடியாதது. அதிரடியாக ஆடி சதமடித்து சென்னை அணிக்கு மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்தார். 

ஐபிஎல்லில் அவர் சிறப்பாக ஆடியதை கண்ட சிட்னி தண்டர்ஸ் அணி, அவருடனான ஒப்பந்தத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.

பிக்பேஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணியின் கேப்டனான வாட்சனின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், ஐபிஎல்லில் அவர் ஆடிய விதத்தை பார்த்து, அவருடனான ஒப்பந்தத்தை அந்த அணி நிர்வாகம் மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்துள்ளது. இதுதொடர்பாக வாட்சன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.