இந்திய பவுலர் ஸ்ரீகாந்த் வாக் என்பவர் இங்கிலாந்தில் நடந்துவரும் கிளப் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். 

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் வாக். இடது கை பேட்டிங், இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீகாந்த் வாக், 63 முதல் தர போட்டிகளில் ஆடி 161 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 44 டி20 போட்டிகளில் 51 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

ஐபிஎல் தொடரிலும் ஸ்ரீகாந்த் வாக் ஆடியுள்ளார். 2009 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும், 2010 மற்றும் 2011 ஆகிய இரண்டு ஐபிஎல் சீசன்களிலும் புனே அணிக்காகவும் ஆடினார்.

இவர் தற்போது இங்கிலாந்தில் நடந்துவரும் வடக்கு யார்க்‌ஷைர் மற்றும் தெற்கு டுர்காம் கிரிக்கெட் லீக்கில் ஸ்டோக்ஸ்லி கிளப் அணிக்காக ஆடிவருகிறார். ஸ்டோக்ஸ்லி கிளப் மற்றும் மிடில்ஸ்பர்க் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், ஸ்ரீகாந்த் வாக் இடம்பெற்றுள்ள ஸ்டோக்ஸ்லி கிளப் அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் இந்திய பவுலர் ஸ்ரீகாந்த் வாக், எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இவர் மட்டுமே 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றிவிட்டார். 11.4 ஓவர்கள் வீசி வெறும் 39 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஸ்ரீகாந்த் வாக்.