இரண்டரை ஆண்டுக்கு பிறகு இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என இந்திய அணி இழந்துள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது. 257 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பேர்ஸ்டோ அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். பேர்ஸ்டோ 30 ரன்களிலும் வின்ஸ் 27 ரன்களிலும் வெளியேறினர். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் - மோர்கன் ஆகிய இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை நிதானமாக கையாண்டு விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக ஆடி இலக்கை எட்டி வெற்றி பெற்றனர். இரண்டாவது போட்டியில் சதமடித்த ரூட், இந்த போட்டியிலும் சதமடித்தார். 

இதையடுத்து இந்த போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, ஒருநாள் தொடரையும் இழந்தது. இதன்மூலம், இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளது. 

2016 ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்ததற்கு பிறகு, இந்திய அணி வேறு எந்த ஒருநாள் தொடரையும் இழந்ததில்லை. அதன்பிறகு நடந்த அனைத்து ஒருநாள் தொடர்களையும் இந்திய அணி வென்றுவந்தது. இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு இங்கிலாந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது.