19 நாட்களுக்குள் ஐந்து தங்கப் பதக்கங்களை வேட்டையாடியுள்ள இந்திய வீராங்கனை ஹிமா தாஸை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட  பல பிரபலங்கள் பாராட்டியுள்ளனர்.

இந்தியாவின் ’டிங்க் எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் ஹிமா தாஸ், 400 மீட்டர் தூரத்தை 52.09 விநாடிகளில் கடந்து தனது 5வது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். செக் குடியரசில் நடைபெறும் நோவ் மேஸ்டோ நாட் மெடுஜி கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்டியில்தான் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளர். இவருக்கு தற்போது 19 வயதாகிறது.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த  இளம் ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ். 2018ஆம் ஆண்டில் தாம்பரேவில் நடைபெற்ற இளையோருக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்தி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர். அதன் பின்னர் நடைபெற்ற ஆசியப் போட்டிகளிலும் இந்தியா சார்பில் பல்வேறு பதக்கங்களை வென்று குவித்தார் ஹிமா தாஸ். இந்த ஆண்டுத் தொடக்கத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வு காரணமாகப் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த ஹிமா தாஸ், ஜூன் மாதம் மீண்டும் களத்தில் இறங்கினார். ஜூலை 2ஆம் தேதி போலந்து நாட்டில் நடைபெற்ற போஸ்னான் தடகளப் போட்டியின் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று தனது பதக்க வேட்டையைத் தொடங்கிய ஹிமா தாஸ், 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து நான்கு தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார்.

இந்நிலையில், 400 மீட்டர் ஓட்டத்தில் மீண்டும் களமிறங்கிய ஹிமா,  நேற்று முன் தினம் ஜூலை 20ஆம் தேதி பராகுவேவில் நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் பந்தய தூரத்தை 52.09 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இதன் மூலம் 19 நாட்களுக்குள் 5 தங்கப் பதக்கங்களை இவர் வேட்டையாடியுள்ளார். தங்கம் வென்ற ஹிமா தாஸை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி போன்ற பல பிரபலங்கள் பாராட்டியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக ஹிமா தாஸ் நிகழ்த்தியுள்ள சாதனைகளால் இந்தியா பெருமை கொள்கிறது எனவும், அவர் எதிர்காலத்தில் மேலும் பல பதக்கங்களை நாட்டுக்காக வெல்ல வாழ்த்துகள் எனவும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் வாழ்த்தியுள்ளார். கடந்த 19 நாட்களாக ஐரோப்பாவில் வெற்றிகளைக் குவித்துவரும் ஹிமா தாஸுக்கு பாராட்டுகள் எனவும், ஹிமாவின் வெற்றிக்கான தாகம் நாட்டின் இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும் எனவும் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இந்தியாவின் தங்க மங்கை ஹிமா தாஸுக்குப் பாராட்டுகள் என்று ரிஷப் பந்த் வாழ்த்தியுள்ளார்.