இந்தியா இங்கிலாந்து இடையேயான தொடர் வரும் ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது. அயர்லாந்துடனான இரண்டாவது டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியை முடித்துக்கொண்டு இந்திய அணி, இங்கிலாந்து செல்கிறது.

இங்கிலாந்துடன் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஆடுகிறது. அடுத்த ஆண்டு உலக கோப்பை இங்கிலாந்தில் நடைபெறுவதால் இந்த தொடர் அதன் முன்னோட்டமாக அமையும். அதனால் இந்த தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. 

அதுமட்டுமல்லாமல் கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இழந்தது. கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் மிகவும் மோசமான தோல்வியை இந்திய அணி பதிவு செய்தது. 

அதனால் அதற்கும் சேர்த்து பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. கடந்த 2014 சுற்றுப்பயணத்தின்போது, கோலி 10 இன்னிங்ஸ்களில் சேர்த்தே 135 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதனால் அவரும் இந்த முறை இங்கிலாந்தில் தனது திறமையை நிரூபித்து சாதித்துக்காட்ட வேண்டிய அவசியத்திலும் முனைப்பிலும் உள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என வென்று அந்த அணியை ஒயிட் வாஷ் செய்து அனுப்பியுள்ளது இங்கிலாந்து. தரவரிசையிலும் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது. தற்போதைய சூழலில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி வலுவாகவும் உள்ளதால் அந்த அணியுடனான இந்திய தொடர் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தொடர் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் அதிகரிக்கும் விதமாகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டிகள் குறித்து நன்கு பகுப்பாய்ந்து வர்ணனை செய்யும் விதமாகவும் சில ஜாம்பவான்களை வர்ணனையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா இங்கிலாந்து போட்டிகளை நன்கு ஆழமாக ஆராய்ந்து வர்ணனை செய்யும் விதமாகவும் நிறைய பயனுள்ள தகவல்களை அனுபவத்தின் வாயிலாகவும் போட்டி குறித்து ஆராய்ந்தும் வர்ணனை செய்வதற்காக கங்குலி, நெஹ்ரா போன்ற முன்னாள் வீரர்களையும் கிரிக்கெட் நிபுணர்களையும் நியமித்துள்ளது, இந்த போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்போர்ட்ஸ் சேனல். 

கங்குலி, நெஹ்ரா, ஹர்ஷா போக்ளே, சஞ்சய் மஞ்சரேக்கர், ஸ்வான்(இங்கிலாந்து முன்னாள் வீரர்), சுனில் கவாஸ்கர், கவுரவ் கபூர், விவேக் ரஸ்டான், தீப் தாஸ்குப்தா, ஆலன் வில்கின்ஸ் ஆகியோர் வர்ணனை செய்ய உள்ளனர். 

இந்தியா இங்கிலாந்து போட்டிக்கு அப்பாற்பட்டு இவர்களின் வர்ணனையும் இந்த தொடரில் மிக முக்கிய பங்கு வகிக்கும். பல பயனுள்ள தகவல்களை இந்த வர்ணனையாளர்கள் பகிர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.