வேகமாக ரன் ஓடுவதில் கோலி சிறந்தவர் என இங்கிலாந்து அணியின் சீனியர் பவுலரான ஆண்டர்சன் புகழாரம் சூட்டியுள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான டி20 தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. இதையடுத்து ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலை அடைந்துள்ளது. 

இந்த போட்டியில் சீரான இடைவெளியில் இந்திய வீரர்கள் விக்கெட்டுகளை இழந்ததுதான் தோல்விக்கு காரணமாக அமைந்தது. மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த இந்திய அணிக்கு கோலி - ரெய்னா ஜோடி தான் நம்பிக்கை அளித்தது. கோலி 45 ரன்களும் ரெய்னா 46 ரன்களும் எடுத்தனர். அதன்பிறகு களமிறங்கிய தோனி பந்துகளை அதிகமாக வீணடித்தார்.

இறுதியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. ரன் மெஷின் என அழைக்கப்படும் கோலி, நடு ஓவர்களில் பந்துகளை வீணடிக்காமல் ஆடுவதில் வல்லவர். சிங்கிளாவது ஓடி எடுத்துவிடுவார். கோலியுடன் ஆடும் வீரர் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் வேகமாக ஓடி ரன் எடுக்கக்கூடியவர் கோலி. ஒன்றை இரண்டாக மாற்றுவதிலும் இரண்டை மூன்றாக்குவதிலும் கோலி கைதேர்ந்தவர். 

இந்நிலையில், கோலியின் ரன் ஓடும் திறன் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், கோலி ரன் எடுக்காமல் பந்துகளை விடுவது என்பது அரிது. குறைந்தது சிங்கிள் எடுத்துவிடுவார். வேகமாக ஓடி ரன் எடுப்பதில் உலகளவில் கோலி சிறந்த வீரர் என ஆண்டர்சன் புகழ்ந்துள்ளார்.