இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்த போட்டி சாதாரணமான போட்டி அல்ல. வரலாற்று சிறப்புமிக்க போட்டி. இதில் வெற்றி பெற்றால் இந்திய அணி வரலாற்றில் இடம்பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. 

கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற டிராவிட் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. அதன்பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி, 2011 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இங்கிலாந்துக்கு சென்று டெஸ்ட் தொடர் ஆடியது. அந்த இரண்டு தொடர்களிலுமே இந்திய அணி தோல்வியை தழுவியது. 2011ம் ஆண்டு 0-4 எனவும் 2014ம் ஆண்டு 1-3 எனவும் டெஸ்ட் தொடரை இழந்தது. தோனி தலைமையிலான இந்திய அணி 2011 மற்றும் 2014 ஆகிய இரண்டு முறையும் டெஸ்ட் தொடரை இழந்தது. 

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணியும் தொடரை வெல்வதில் தீவிரமாக உள்ளது. இந்திய அணி எப்போதுமே பேட்டிங்கில் வலுவான அணியாகத்தான் திகழ்ந்துவருகிறது. 

சமபலம் வாய்ந்த இரு அணிகளும் பலப்பரீட்சை செய்வதால், இந்த தொடர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி, இங்கிலாந்து அணியின் ஆயிரமாவது சர்வதேச டெஸ்ட் போட்டி. ஆயிரமாவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆடும் முதல் அணி இங்கிலாந்து தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

எனவே இங்கிலாந்து அணியின் ஆயிரமாவது டெஸ்ட் போட்டி என்பதால் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியாக இது பார்க்கப்படுகிறது. இதில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தினால் வரலாற்றில் இடம்பிடிக்கும். எனவே இந்த போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் பெரும் ஆவலாக உள்ளது.