முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்றதை அடுத்து இந்திய வீரர்களை இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் விராட் கோலியை தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் சரியாக ஆடவில்லை. பேட்டிங்கில் சொதப்பியதன் விளைவாகத்தான் இந்திய அணி தோற்றது. 

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட்டை ரன் அவுட்டாக்கிய விராட் கோலி, ரூட் ஒருநாள் தொடரை வென்றபோது செய்த செய்கையை செய்து காட்டி பதிலடி கொடுத்து வழியனுப்பி வைத்தார். ரூட்டிற்கு கோலி பதிலடி கொடுத்தது இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. எனினும் முதல் இன்னிங்ஸில் தனி ஒருவராக போராடி கோலி சதமடித்தபோது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கோலியின் திறமைக்கும் போராட்டத்திற்கு மரியாதை கொடுத்தனர். 

இரண்டாவது இன்னிங்ஸிலும் கோலி மட்டுமே வெற்றிக்காக போராடினார். அவர் அவுட்டானதும் இந்திய அணி தோற்றுவிட்டது. இந்நிலையில், ஹோட்டலுக்கு செல்வதற்காக இந்திய வீரர்கள் பேருந்தில் சென்றபோது, அங்கு குவிந்திருந்த இங்கிலாந்து ரசிகர்கள், உங்க விராட் கோலி எங்கே என கேட்டு கூச்சலிட்டு இந்திய வீரர்களையும் இந்திய ரசிகர்களையும் கிண்டல் செய்தனர்.

அடுத்த டெஸ்ட் போட்டி வரும் 9ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.