கோலியை வீழ்த்த வகுத்துள்ள வியூகத்தை இங்கிலாந்து பயிற்சியாளர் பொதுவெளியில் சொல்லியுள்ளார். டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியின் கேப்டன், அதுவும் நம்பர் 1 வீரரை வீழ்த்தும் வியூகத்தை வெளியில் சொல்லும் அளவிற்கு இந்திய அணியின் தரம் குறைந்துவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தது. ஆனால் கோலியை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாருமே சோபிக்கவில்லை. கோலி மட்டுமே இரண்டு இன்னிங்ஸ்களிலும் போராடினார். முதல் இன்னிங்ஸில் சதமடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார். 

இரண்டு இன்னிங்ஸ்களிலும் கோலியின் விக்கெட்டை வீழ்த்த இங்கிலாந்து பவுலர்கள் திணறினர். இங்கிலாந்தின் பவுலிங்கை திறம்பட கையாண்டார் விராட் கோலி. முதல் போட்டியில் இங்கிலாந்து பெரிய வெற்றியை பெற்றுவிடவில்லை. கடைசி நேரத்தில் திரில்லர் வெற்றியைத்தான் பெற்றது. எனவே விராட் கோலி ஒருவர் சிறப்பாக ஆடினாலே இங்கிலாந்திடம் வெற்றியை நெருங்கிவிடக்கூடிய சூழல் தான் உள்ளது. மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடினால் இங்கிலாந்திற்கு நெருக்கடி அதிகமாகும். 

இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 9ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்நிலையில், அடுத்த போட்டி குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரேவர் பேலிஸ், உலக கிரிக்கெட்டில் கோலி மட்டும் சிறந்த பேட்ஸ்மேனாக இல்லாமல் இருந்திருந்தால், அவரை எங்கள் வீரர்கள் எப்போதோ ஆட்டமிழக்க செய்திருப்பார்கள். முதல் போட்டியில் கோலி அபாரமாக ஆடினார். 

நல்ல பவுலிங் யூனிட்டை கொண்ட எங்கள் அணியின் பவுலர்கள் எவ்வளவோ நெருக்கடி கொடுத்தபோதும், கோலி திறமையாக ஆடினார். கோலியின் விக்கெட்டை வீழ்த்துவது கடினம். அதனால் இனிவரும் போட்டிகளில் எங்கள் உத்தியை மாற்றிக்கொள்ள இருக்கிறோம். விராட் கோலிக்கு நெருக்கடி கொடுக்காமல், மற்ற வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க இருக்கிறோம். எங்கள் பவுலர்கள் கொடுக்கும் நெருக்கடியில் மற்ற வீரர்கள் ஆட்டமிழப்பார்கள். மற்ற வீரர்கள் விக்கெட்டை இழப்பது, கோலிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். கோலி விக்கெட்டை இழப்பார் என கோலியை வீழ்த்த வகுத்துள்ள வியூகத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த அணியான இந்திய அணியின், கோலியை தவிர மற்ற வீரர்களை சாதாரணமாக எடைபோட்டுள்ளது இங்கிலாந்து அணி. இந்த எண்ணத்தை அந்த அணிக்கு ஏற்படுத்தியதே இந்திய அணியின் சொதப்பலான பேட்டிங் தான். எனவே கோலியை நம்பி மட்டுமே இந்திய அணி இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய தருணம் இது. எனவே இனிவரும் போட்டிகளில் முரளி விஜய், தவான், ரஹானே, தினேஷ் கார்த்திக், புஜாரா அல்லது ராகுல் என அனைவருமே சிறப்பாக ஆட வேண்டியது அவசியம்.