சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடுகிற காரணத்துக்காகவே பச்சைத் தமிழனாக மாறத்துடித்துக்கொண்டிருப்பவர்கள் பட்டியலில் தற்போது வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வீரர் ஆல்ரவுண்டர் ட்வைன் பிராவோவும் இணைந்துள்ளார். விரைவில் தான் தமிழில் ட்விட் செய்யப்போவதாகவும் பகீர் கிளப்பியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிராவோ. இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நீண்ட காலமாக அவர் சென்னை அணியில் விளையாடி வருவதால் இங்குள்ள கலாச்சாரம், உணவு வகைகள் அவருக்கு மிகவும் பிடிக்கும்.

மேலும் பிராவோ ஒரு இசைப்பிரியர். நடனம் ஆடுவதிலும் வல்லவர். ஏற்கனவே  “சித்திரம் பேசுதடி 2” என்ற தமிழ் படத்துக்கு அவர் பாடியுள்ளார்.இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க விரும்புவதாக பிராவோ தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்,’ நடிகர் ரஜினிகாந்தை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் நான் அவரது ஒரு படத்தை கூட பார்க்கவில்லை. விரைவில் பார்ப்பேன். ரஜினிகாந்தை சந்திக்க நான் விரும்புகிறேன். என்றாவது ஒரு நாள் சந்திக்கும் ஆர்வத்துடன் இருக்கிறேன்.

நான் ஏற்கனவே ‘சித்திரம் பேசுதடி 2’ என்ற தமிழ் படத்தில் பாடி இருக்கிறேன். அது தமிழில் எனக்கு கிடைத்த முதல் வாய்ப்பாகும். அந்த பாடல் இன்னும் எனக்குள் இருக்கிறது. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனது இரு கைகளாலும் பற்றிக் கொள்வேன். தமிழ் படத்தில் நான் நடிப்பதற்கான பணியில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் ஆகியோர், தமிழில் ‘டுவிட்’ செய்வதுபோல் நானும்  விரைவில் தமிழ் கற்றுக்கொண்டு ஒரு நாள் செய்வேன். 

ஏற்கனவே பச்சைத் தமிழர்கள் பட்டியலில் இடம் பெற்றுவிட்ட தோனி, இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் வரிசையில அண்ணன் ட்வைன் பிராவோவையும் சேர்த்துக்கங்க பாஸ்.