இந்திய அணியில் இடம்பெற்ற சமயத்தில் தனக்கு தோனி கொடுத்த அறிவுரை குறித்து இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் மனம் திறந்துள்ளார்.

இந்திய அணி ஏராளமான இளம் கிரிக்கெட் வீரர்களை கொண்டுள்ளது. அதில் முக்கியமானவர் ஷ்ரேயாஸ் ஐயர். ஷ்ரேயாஸ் ஐயர் 2015ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் 2015ம் ஆண்டு அறிமுகமானார். 

ஐபிஎல் 11வது சீசனில் டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து காம்பீர் விலக, கேப்டனானார் ஷ்ரேயாஸ். ஒரு கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டார். இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார். 

கடந்த 2017ம் ஆண்டு இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் அறிமுகமானார். அவர் அறிமுகமான சமயத்தில் தோனி வழங்கிய அறிவுரை குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், நான் அணியில் சேர்ந்த புதிதில் பத்திரிகைகளை படிப்பதை தவிர்க்குமாறும் சமூக வலைதளங்களில் இருந்து சற்று ஒதுங்கி இருக்குமாறும் தோனி எனக்கு அறிவுறுத்தினார். நம்மை பற்றி விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் ஆட்டத்தில் முழு கவனத்தையும் செலுத்துவதற்கு அது உதவும் என்பதால் தோனி அந்த அறிவுரையை கூறியதாகவும் தெரிவித்தார்.