ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் குஜராத்தை எதிர்கொண்டுள்ள மும்பை, தனது முதல் இன்னிங்ஸில் 83.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 228 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இந்தூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச தீர்மானித்தது.

முதலில் பேட் செய்த மும்பை அணியில் பிருத்வி, அகில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

இதில் சிறப்பாக ஆடிய பிருத்வி 71 ஓட்டங்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். உடன் வந்த அகில் 4 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்தவர்களில் சூரியகுமார் யாதவ் மட்டும் அதிகபட்சமாக 57 ஓட்டங்கள் எடுத்தார்.
ஷ்ரேயாஸ் ஐயர் 14, ஆதித்யா தாரே 4, சித்தேஷ் லாட் 23, அபிஷேக் 35 ஓட்டங்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினர்.

இவ்வாறு அனைத்து விக்கெட்டுகளும் வீழ்ந்ததால், 83.5 ஓவர்களில் 228 ஓட்டங்கள் எடுத்தது மும்பை.

குஜராத் தரப்பில், ஆர்.பி.சிங், கஜா, ருஜுல் பாட் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ள குஜராத், முதல் நாள் ஆட்டநேர முடிவில் 1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

சமீத் கோயல் 2 ஓட்டங்களுடனும், கிரீத் பன்சல் ஓட்டங்கள் ஏதும் இன்றியும் களத்தில் உள்ளனர்.