இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இங்கிலாந்து அணியின் பேட்டிங்கின் போது, கடைசி ஓவரில் புவனேஷ்வர் குமாரை அம்பயரும் டேவிட் வில்லேவும் சேர்ந்து கோபப்படுத்திவிட்டனர். புவனேஷ்வர் குமாரும் டேவிட் வில்லேவும் மோதிக்கொண்டனர். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் போட்டியிலேயே மோதல் ஏற்பட்டது. இந்தியா - இங்கிலாந்து தொடர் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று தொடங்கியது. முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. 

முதல் போட்டியிலேயே இந்திய அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குல்தீப்பின் அசத்தல் சுழல், ராகுலின் அதிரடி சதம் ஆகியவற்றால் இந்திய அணி, போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் பட்லர் அதிரடியாக ஆடி 69 ரன்களை குவித்தார். அதிரடியாக தொடங்கிய இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை குல்தீப் யாதவ் சிதைத்தார். 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் குல்தீப். அதிரடியாக தொடங்கி, இடையில் திணறிய இங்கிலாந்து அணிக்கு கடைசி நேரத்தில் கைகொடுத்தார் டேவிட் வில்லே. கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடி, 15 பந்துகளில் 29 ரன்களை குவித்தார். 

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர பவுலரான புவனேஷ்வர் குமாரின் பவுலிங் நேற்றைய போட்டியில் எடுபடவில்லை. அவர் வீசிய 17வது ஓவரை எதிர்கொண்ட வில்லே, அந்த ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் குவிக்கப்பட்டன. 

அந்த ஓவரில் பெரும்பாலான பந்துகளை லெக் திசையிலேயே வீசினார் புவனேஷ்வர் குமார். ஆனால் லெக் திசையில் வீசப்பட்ட பந்துகளை லாவகமாக அடித்து ஆடினார் வில்லே. லெக் திசை பந்துகளை வில்லே அடித்து ஆடியதால், 19வது ஓவரை வீசிய உமேஷ் யாதவ் வில்லேவிற்கு ஆஃப் திசையிலேயே பந்துகளை வீசினார். அதனால் வில்லேவால் பெரிய ஷாட்களை ஆடமுடியவில்லை. 

17வது ஓவரில் ரன்களை வாரி வழங்கியதால் அதிருப்தியில் இருந்த புவனேஷ்வர் குமார், கடைசி ஓவரை சுதாரிப்பாக வீசினார். கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் புவனேஷ்வர் குமார். உமேஷ் ஆஃப் திசையில் வீசிய பந்துகளை வில்லே அடிக்காததால், புவனேஷும் ஆஃப் திசையில் வீசினார். 

இதையடுத்து பவுலர்களின் சூட்சமத்தை அறிந்துகொண்ட வில்லே, ஆஃப் திசை பந்துகளை அடிப்பதற்கு தயாராக, பந்து வீசுவதற்கு முன்னதாகவே ஆஃப் திசையை நோக்கி நகர ஆரம்பித்தார். அதனால் மேலும் நன்றாக விலக்கி வீசினார் புவனேஷ். விலக்கி வீசப்பட்ட 4வது பந்திற்கு அம்பயர் வைடு கொடுத்தார். மீண்டும் வில்லே ஆஃப் திசையில் ஏறிவர, மறுபடியும் நன்றாக விலக்கி போட்டார் புவனேஷ். அதையும் அம்பயர் வைடு கொடுக்க, புவனேஷ் அதிருப்தியுடன் அம்பயரிடம் வாதிட்டார். 

பேட்ஸ்மேன்கள் பந்து போடுவதற்கு முன்னதாக ஏறிவரும் நிலையில், ஆஃப் திசையில் விலக்கி வீசப்படும் பந்துகளுக்கு வைடு கொடுக்கப்படாது. எனினும் அம்பயரின் செயலால் ஏற்கனவே அதிருப்தியில் இருந்தார் புவனேஷ்வர் குமார். மீண்டும் கடைசி பந்தை புவனேஷ் வீச வரும்போது, மறுபடியும் ஆஃப் திசையில் நகர்ந்து வந்தார் வில்லே. இதைக்கண்ட புவனேஷ்வர் குமார், பந்துவீசவில்லை. இதையடுத்து புவனேஷ்வர் குமாருக்கும் வில்லேவிற்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. 

பொதுவாக பெரியளவில் ஆக்ரோஷமாகாத புவனேஷ்வர் குமார், வில்லேவுடன் கோபமாக மோதினார். இருவருக்கும் இடையே சிறிய மோதல் ஏற்பட்டது. பின்னர் புவனேஷ்வர் குமார் கடைசி பந்தை வீச அதில் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

<blockquote class="twitter-tweet" data-lang="en-gb"><p lang="und" dir="ltr"><a href="https://t.co/gQv0LVzkdS">pic.twitter.com/gQv0LVzkdS</a></p>&mdash; Utkarsh Bhatla (@UtkarshBhatla) <a href="https://twitter.com/UtkarshBhatla/status/1014215554293485570?ref_src=twsrc%5Etfw">3 July 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>