2018-ம் ஆண்டின் பிபா சிறந்த கால்பந்து வீரராக குரோஷிய நாட்டு வீரர் லூகா மோட்ரிச்சும், மகளிர் பிரிவில் பிரேசில் வீராங்கனை மார்டாவும் சிறந்தவராகும் தேர்வு செய்யப்பட்டு லண்டனில் விருது வழங்கப்பட்டது. பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச்செல்ல ரொனால்டோ, முகமது சலா, லூகா மோட்ரிச் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் லூகா மோட்ரிச் தட்டிச் சென்றார். 

உலக கால்பந்து சம்மேளமான பிபா ஆண்டுதோறும் சிறந்த கால்பந்து வீரர், வீராங்கனையைத் தேர்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான வீரர்களைத் தேர்வு செய்யும் பட்டியலில் 5 முறை பிபா விருது பெற்ற ரொனால்டோ, லிவர்பூல் அணிக்காக 43 கோல்கள் அடித்த முகமது சலா, ரியல்மாட்ரிட் வீரர் லூகா மாட்ரிச் ஆகியோருக்கு இடைய கடும் போட்டி நிலவியது. 

இந்நிலையில், கடும் போட்டிக்கு மத்தியில் லூகா மோட்ரிச் தேர்வு செய்யப்பட்டார். 33வயதான மோட்ரிச் ரியல்மாட்ரிட் அணி 3-வது முறையாக சாம்பின் லீக் போட்டியில், சாம்பியன் பட்டம் வெல்ல உறுதுணையாக இருந்தவர். 2018-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் குரோஷிய அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வர காரணமாக இருந்தவர். ஆனால், இறுதிப்போட்டியில் பிரான்ஸிடம் 4-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது குரோஷியா என்பது தனிக்கதை.

இந்த விருது குறித்து மோட்ரிச் கூறுகையில், இந்த விருதுடன் இந்த இடத்தில் நான் நிற்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது, மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த விருது எனக்கானது அல்ல, என்னுடைய ரியல் மாட்ரிட் அணிக்கானது, குரோஷிய அணிக்கானது. நான் சிறப்பாக விளையாடிய அனைத்து பயிற்சியாளர்களுக்கும் எனது நன்றிகள். அவர்கள் இல்லாமல் இந்த விருது எனக்கு சாத்தியமில்லை. அனைவருக்கும் எனது நன்றி எனத் தெரிவித்தார். 

மோட்ரிச் முதலாவது இடத்திலும், ரியல்மாட்ரிட் வீரர் ரொனால்டோ 2-வது இடத்திலும், லிவர்பூல் பார்வேர்ட் வீரர் முகம்மது சலா 3-வது இடத்திலும், பிரான்ஸ் வீரர் லியான் பாப்பே 4-வது இடத்திலும், மெஸ்ஸி 5-வது இடத்துக்கும் தேர்வு செய்யப்பட்டனர். டோட்டன்ஹாம் அணியைச் சேர்ந்தவரும், இங்கிலாந்து வீரருமான ஹேரி கேன் 10-வது இடத்துக்கு தேர்வு செய்யப்பட்டார். மகளிர் பிரிவில் சிறந்த வீராங்கனையாக பிரேசில் வீரர் மார்டா 6-வது முறையாக சிறந்த வீராங்கனைக்கான விருதைப் பெற்றார்.