கோலியை சதமடிக்க விடமாட்டோம் என ஆஸ்திரேலிய அணி பவுலர் பாட் கம்மின்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் இல்லாமல் அந்த அணி திணறிவருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஒயிட் வாஷ் ஆன ஆஸ்திரேலியா, ஒரே ஒரு டி20 போட்டியிலும் தோற்றது. அதன்பிறகு ஜிம்பாப்வேவில் நடந்த முத்தரப்பு டி20 தொடரையும் இழந்தது.

ஆனால் இந்திய அணி அதற்கு எதிர்மாறாக நல்ல ஃபார்மில் உள்ளது. உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், இந்திய அணியின் இந்த ஃபார்ம், உலக கோப்பை தொடருக்கு உதவும். இங்கிலாந்தில் ஆடிவரும் இந்திய அணி, டி20 தொடரில் அபாரமாக ஆடி வென்றுள்ளது.

இதையடுத்து வரும் நவம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்று 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. 

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், இப்போதே சவால்களும் வார்த்தைப் போர்களும் தொடங்கிவிட்டன. சமகால கிரிக்கெட்டில் சிறந்த வீரரும், சாதனைகளை குவித்துவருபவருமான ரன் மெஷின் கோலிக்கு ஆஸ்திரேலிய பவுலர் பாட் கம்மின்ஸ் சவால் விடுத்துள்ளார்.

கோலி தொடர்பாக பேசிய பாட் கம்மின்ஸ், விராட் கோலியை எங்களுக்கு எதிராக சதமடிக்க விடமாட்டோம் என சவால் விடுக்கும் வகையில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

கடந்த 2014-2015ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சென்றபோது, விராட் கோலி சிறப்பாக ஆடினார். 4 டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்கள் மற்றும் இரண்டு அரைசதங்களுடன் 992 ரன்களை குவித்தார். அந்த தொடர் முழுவதுமே கோலி சிறப்பாக ஆடியது குறிப்பிடத்தக்கது.