டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கத்துக்குட்டியான ஆஃப்கானிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியதுபோலவே, நம்பர் 1 அணியான இந்திய அணியை இங்கிலாந்து வீழ்த்தியுள்ளது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டி மொத்தமாகவே 3 நாட்களில் முடிந்துவிட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் கத்துக்குட்டியான ஆஃப்கானிஸ்தானை இந்திய அணி 2 நாட்களில் வீழ்த்தியது. ஆனால் வீசப்பட்ட ஓவர்களை கணக்கிட்டால் இரண்டு போட்டியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். 

கடந்த ஜூன் மாதம் பெங்களூருவில் இந்தியா ஆஃப்கானிஸ்தான் இடையேயான ஒரு டெஸ்ட் போட்டி நடந்தது. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு அதுதான் முதல் டெஸ்ட் போட்டி. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 474 ரன்கள் குவித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கும் இரண்டாவது இன்னிங்ஸில் 103 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

போட்டி இரண்டே நாளில் முடிந்துவிட்டது. இந்திய அணி 105 ஓவர்கள் பேட்டிங் ஆடியது. ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 67 ஓவர்கள் ஆடியது. எனவே மொத்த போட்டியே 172 ஓவர்களில் முடிந்துவிட்டது. 

நாம் கத்துக்குட்டி அணியை வீழ்த்தியதுபோலவே, நம்பர் 1 அணியான நம்மை இங்கிலாந்து வீழ்த்தியுள்ளது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி மழை காரணமாக ஒருநாள் தாமதமாக தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டத்தின் இடையிடையே மழை குறுக்கிட்டது. முதல் நாள் வெறும் 35 ஓவர்கள் மட்டுமே ஆடி 107 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. இதையடுத்து மூன்றாம் நாள் முழுவதும் ஆடிய இங்கிலாந்து அணி, நான்காம் ஆட்டம் தொடங்கி சில நிமிடங்களில் டிக்ளேர் செய்தது. 88 ஓவர்களில் 396 ரன்கள் குவித்து இங்கிலாந்து டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 47 ஓவர்களில் 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி, மொத்தமாக 82 ஓவர்கள் மட்டுமே ஆடியுள்ளது. இங்கிலாந்து ஆடிய ஓவர்களையும் சேர்த்து மொத்தமாக 170 ஓவர்களில் போட்டி முடிந்துவிட்டது. போட்டியும் முன்றே நாட்களில் முடிந்தது. 

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி மூன்று நாட்கள் நடந்திருந்தாலும், வீசப்பட்ட ஓவர்களை கணக்கிட்டால், இந்தியா - ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் வீசப்பட்ட ஓவர்களை விட இரண்டு குறைவுதான். டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கத்துக்குட்டி அணி, நம்மிடம் தோற்றதுபோன்ற ஒரு மோசமான தோல்வியை நம்பர் 1 அணியான இந்தியா, இங்கிலாந்திடம் அடைந்துள்ளது. 

வத்திக்குச்சி திரைப்படத்தில் சம்பத் கூறும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது. அந்த படத்தின் நாயகனை ஆட்களை வைத்து அடித்த ரவுடி சம்பத்தை, மீண்டும் அந்த நாயகன் பதிலுக்கு அடித்துவிடுவார். நாயகனிடம் அடி வாங்கிய வலி குறித்து நண்பரிடம் சம்பத் கூறும் வசனம் அது.. 

அந்த வசனம்: அன்று நான் அவனை அடித்தபோது கூனிகுறுகிய அவனது முகம் எப்படி இருந்ததோ, அவன் என்னை அடித்தபோது என் முகம் அப்படித்தான் இருந்தது என்று ஒரு வசனம் வரும்.

ஆஃப்கானிஸ்தானை தோற்கடித்ததும் நம்பர் 1 அணி என்பதை நிரூபித்துவிட்டோம் என்ற திருப்தியில் இருந்திருக்கும் இந்திய அணி. ஆனால் இங்கிலாந்திடம் என்ன ஆனது நம்பர் 1 டெஸ்ட் அணி என்ற பெருமை..? ஆஃப்கானிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தபோது, கத்துக்குட்டியான அந்த அணியின் உணர்வு எப்படி இருந்திருக்குமோ, அப்படித்தான் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்த இந்திய அணியின் உணர்வும் இருந்திருக்கும். 

லார்ட்ஸில் தோற்றபிறகு அதேபோல ஆகிவிட்டது இந்திய அணியின் நிலை.