இந்தியாவில் சினிமாவுக்கும் விளையாட்டுக்கும் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அதிலும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கினால், அதற்கு கிடைக்கும் வரவேற்பு வேற லெவலில் இருக்கிறது. அப்படி எடுக்கப்படும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைகிறது. 

தடகள வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாற்று படமான பாக் மில்கா பாக், தோனியின் பயோபிக், சச்சின் டெண்டுல்கரின் பயோபிக் ஆகியவை வெளியாகி பெரும்  வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக, இந்தியாவிற்கு முதல் உலக கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கபில் தேவின் பயோபிக் வெளியாகவுள்ளது.

1983ல் கபில் தேவ் தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை வென்றது. எனவே “83” என்ற பெயரில் உருவாகியுள்ள கபில் தேவின் பயோபிக்கில் ரன்வீர் சிங், கபில் தேவாக நடித்துள்ளார். அதேபோல இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் பயோபிக்கில் அவரது வேடத்தை ஏற்று நடித்துவருகிறார் நடிகை டாப்ஸி. பாக்ஸிங் வீராங்கனை மேரி கோமின் பயோபிக்கில் பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். 

இவ்வாறாக விளையாட்டு வீரர்களின் பயோபிக்கிற்கு தேசியளவில் அனைத்து மொழிகளிலும் பெரிய வியாபாரம் இருப்பதால், பெரிய ஜாம்பவான் வீரர்களின் பயோபிக்கை படமாக்க பலர் ஆர்வம் காட்டுகின்றனர். 

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் யுவராஜ் சிங்கிடம் அவரது பயோபிக் எடுக்கப்பட்டால், அவரது கதாபாத்திரத்தை எந்த நடிகர் ஏற்று நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு யுவராஜ் சிங் அதிரடியாக பதிலளித்துள்ளார். 

Also Read - இதைவிட கேவலமான ஒரு ஃபீல்டிங்கை பார்த்துருக்க மாட்டீங்க.. வீடியோ

2000ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான யுவராஜ் சிங் 2017ம் ஆண்டுவரை இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடினார். அதன்பின்னர் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்துவந்த யுவராஜ் சிங், கடந்த ஆண்டு ஓய்வு அறிவித்தார். 

அதிரடியான பேட்டிங், அசத்தலான பவுலிங், மிரட்டலான ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் இந்திய அணிக்கு பங்களிப்பு செய்தவர் யுவராஜ் சிங். இந்திய அணி சர்வதேச கோப்பைகளை வென்ற தொடர்களிலெல்லாம் யுவராஜ் சிங்கின் பங்களிப்பு அளப்பரியது. 

2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஆகிய இரண்டு கோப்பைகளையும் இந்திய அணி வென்றபோது, அணிக்காக மிகப்பெரிய பங்காற்றியவர் யுவராஜ் சிங். குறிப்பாக 2011 உலக கோப்பையில் தொடர் முழுவதும் அபாரமாக ஆடி தனது முத்திரையை பதித்து உலக கோப்பையை வெல்ல காரணமாக திகழ்ந்தார். அந்த உலக கோப்பையில் தொடர் நாயகன் விருதையும் வென்றார். பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் சிறப்பான பங்களிப்பு செய்து தொடர் நாயகன் விருதை வென்றார். 

Also Read - டி20-யில் இரட்டை சதம் அடிக்கும் தகுதியும் திராணியும் அவருக்கு மட்டும்தான் இருக்கு! ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி

அந்த உலக கோப்பையின்போதே புற்றுநோய்க்கான அறிகுறிகள் அவருக்கு தென்பட்டன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங், அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் இந்திய அணிக்காக ஆடியவர். புற்றுநோயையே வென்றெடுத்தவர் யுவராஜ். மிகுந்த மனவலிமை கொண்டவர். யுவராஜ் சிங்கிற்கு பிறகு அவரது இடத்தை அவ்வளவு எளிதாக யாராலும் நிரப்பிவிட முடியவில்லை. அந்தளவிற்கு மிகச்சிறந்த வீரர் யுவராஜ் சிங். 

இந்திய கிரிக்கெட்டுக்காக மிகப்பெரிய பங்காற்றியுள்ள யுவராஜ் சிங்கிடம், அவரது பயோபிக்கில் யார் நடிக்க வேண்டும் என்ற அவரது விருப்பம் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த யுவராஜ் சிங், நானே பண்ணலாமே.. ஆனால் அது நல்லாருக்காது.. எனது பயோபிக் எடுக்கப்பட்டால், யாரை நடிக்க வைக்க வேண்டும் என்பது இயக்குநரின் முடிவுதான். அது பாலிவுட் படமாக இருக்குமானால், சித்தாந்த் சதுர்வேதி நடித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். அவர் எனது வேடத்தை ஏற்று நடிப்பதை பார்க்க விரும்புகிறேன் என்று யுவராஜ் சிங் தெரிவித்தார். 

Also Read - ஐபிஎல் தள்ளிப்போனதால் ராஞ்சிக்கு திரும்பிய தோனி! அங்க போயும் சும்மா இல்ல.. தல என்ன பண்றாருனு பாருங்க.. வீடியோ

சித்தாந்த் சதுர்வேதி, 2019ல் வெளியான Gully Boy படத்தில் அறிமுகமானவர். அந்த படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வேறு எந்த படமும் வெளியாகவில்லை ஒரு படம் மட்டுமே இதுவரை நடித்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் நடித்துவருகிறார். அவையெல்லாம் இன்னும் ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.